இந்திய பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இன்று வியாழக்கிழமை பதவியேற்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். இரவு 7 மணி முதல் 8.30 மணிவரை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை சார்பில் இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற மூத்த அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியுடன் 65 பேர் வரை அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.