நான் இன்னும் சாகவில்லை
காலவோட்டத்தின் அலையில்
அடிபட்ட துரும்பாக
அலைபட்டு ஓடிக் கொண்டே
இருக்கிறேன்
எனது ஓட்டத்தின்
எல்லைக் கோடு எதுவென்று
தெரியவில்லை
ஆனாலும் ஓடுகிறேன்…

அதிகாலை விழி திறக்கும்
மணிக்கூண்டின் சத்தத்துக்கும்
இரவு வணக்கம் சொல்லும்
அம்மாவின் செல் பேசிக்கும்
இடையில்
ஐந்து ஈரோவுக்கான
போராட்டப் பந்தையத்தில்
இப்போதெல்லாம்
அதிகமாக
ஓடிக் கொண்டிருக்கிறேன்

உன்னை நினைக்க
எனக்கு நேரமில்லை
பிய்த்து தின்று விடும்
அசுரனாய் சுற்றிச்
சுழலும் இயந்திரத்தின்
வேகத்தில்
என் கை அடிபடாமல் இருக்கவே
என் எண்ணங்கள்
விழித்துக் கொள்கிறது.

யாரோ தின்ற மிச்ச உணவைத்
தட்டிச் சுடுநீரில்
கழுவும் போது மட்டும்
உன் எண்ணம் தினமும்
எட்டிப் பார்க்கும்
தட்டுக்களில் மிஞ்சும்
உணவுகளைக் கண்டால்
உன் விழி சிவந்து கோவம் எழும்
உணர்வு மட்டும் தினம் என்
விழிகளை முட்டித் திறக்கும்

சில வேளைகளில் சில மணித்துளிகளில்
எண்ணங்கள்
பின்னோடி நிலைக்கும்
சுகமா? சோகமா?
அறிய முடியா உணர்வின்
உச்சத்தில்
காவியத்தின் எழுத்துருவாகிவிட்ட
உன் மனச்சிறைக்குள்
வாழ்ந்த இன்பம்
வெட்டை வெளியாகும்

எங்களின் கண்களுக்குள்
தினம் விரியும்
வண்ணச் சிறகுகளை
கனவு என்று கோடிட்டு
கொண்டன அன்றைய
கொடிய நாட்கள்.

காகித மடிப்புகளுக்குள்
பேனா முனைத்
தொடுகைகள் சிதற விட்ட
உயிர் வரிகளைக் கூட
வெறுமை என்று
உரத்துச் சொல்லிக்
கொண்டன அன்றைய
வானத்து முகில்கள்

நான் காணும்
உன் கண்களில்
தெரியும் ஒளிக்கீற்றுக்கள்
சிதறிப் போன
வர்ணக் கலவையாய்
என் துடிக்கும்
உதட்டுக்குள் வானவில்லாய்
ஒளிந்து கொள்ளும்

நடமாடத் தொடங்கிய
குழந்தையாய் மெல்ல
எழுந்துலவிய எங்களின்
காதல் சங்கீதத்தை
குருதி சிந்தி மடிய வைத்த
அந்த கணப் பொழுதை
விழி இதழ்கள்
மறைத்து வைத்துக்
கொண்டே இருக்கின்றன

என் விழி முன்னால்
சிதறிப் போன உன்
உடலத்தின் ஒவ்வொரு
அணுக்களிலும்
நிறைந்திருந்த எனதுயிர்
என்னிடம் இல்லை
இதை நான் அறிவேன்
உனது அணுக்கதிர்களே
எனதுடலை இயக்கும்
எரிபொருள் என்பதை
நானும் உணர்வேன்

ஆனாலும்,
உயிரெனும் உணர்வில்
உறைந்து கிடக்கும் உன்னை
இப்போதெல்லாம்
மெல்ல மெல்ல
மறக்கத் தொடங்கி விட்டேன்

எனக்குள்ளே
வேரூன்றி ஆழ ஊடுருவிக்
கிடக்கும் “நீ ” எனும்
ஆணி வேர் பசுமையற்று
உலர்ந்து போக தொடங்கி
கனநாளாகி விட்டது
புதிதாய் என் அடி மனசில்
பக்க வேர் ஒன்று
முளை கொண்டு விட்டதற்கான
அடையாளம் என்னுள்
தெரிகிறது.

ஆணி வேரின் பசுமை
மெல்ல மெல்லக்
குறைந்து போக
நான் இப்போதெல்லாம்
புதிய ரோஜா மலர் வனத்தின்
வேரைத் தேடத்
தொடங்கி விட்டேன்…

அதனால்
இப்போதெல்லாம் எனக்கு
வெற்றுச் சிரிப்பு
வருவதில்லை
புன்னகைக்கும் பொழுதெல்லாம்
ரோஜா மலரை
வெளித் தள்ளுகிறேன்

ஆனாலும்
ரோஜாவின் கீழே ஒட்டி
வாழும் முள்ளாக உன்
நினைவு குத்திக் கொண்டே இருக்கிறது

எழுதியது: கவிமகன்.இ
நாள். 14.02.2020