13வது திருத்தச் சட்டத்தால் 1987ல் தந்தவற்றைப் பற்றி கூறும் ஜனாதிபதிக்கு அதில் எத்தனை அதிகாரங்கள் தற்போது இல்லை என்பது பற்றித் தெரியாமல் தான் அவ்வாறு கூறுகின்றாரா என வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழிடம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன் அதனை ஜனாதிபதி இன்றும் ஏற்கின்றாரா என்றும் கேள்வியெழுப்பினார்.

அப்படியென்றால் எங்களிடம் கேட்காமல் திருகோணமலை துறைமுகத்தில் சிங்கள மக்களைப் பெருவாரியக இறக்க எத்தனிப்பது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார்.

13வது அரசியல் திருத்தச்சட்டத்தில் உள்ள அதிகாரப் பகிர்வு வடக்குக்குப் போதும் என்று ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பாக தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த சட்டம் மூலம் வடகிழக்கு இணைப்பு கிடைத்தது. சுமார் 18 வருடங்கள் அது எமது அரசியல் யாப்பில் இடம்பெற்றதன் பின்னர் (தன் ஒப்புதல்ப்படி) கட்சி அரசியல் ரீதியாக சிந்திக்கும் ஒரு பிரதம நீதியரசராலும் அவர் சொல் கேட்கும் நீதியரசர்களாலும் அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது.

யாதார்த்த நடபடிமுறை சரியில்லை என்றே துண்டிக்கப்பட்டது. சரியான முறையில் குறித்த இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா? இல்லை. மாறாக அவசர அவசரமாக வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கத்தினர் உருவாக்கி வந்தார்கள்.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் போன்ற கிராமங்களைச் சுற்றிய பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் இந்த நிமிடத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது இரு மாகாணங்களுக்கும் இடையில் சிங்களக் குடியேற்றங்களை இருத்திவிட்டுள்ளனர்.

இவ்வாறு செய்துவிட்டு மத்தியில் சிங்களவர்கள் வாழ்கின்றார்களே வடக்கையும் கிழக்கையும் எவ்வாறு இணைப்பது என்று கேட்பதற்காக அவசர அவசரமாக ஜனாதிபதியின் ஆளுமைக்கு உட்பட்ட மகாவலி அதிகார சபையினதும், இராணுவத்தினரதும், வெலவெலத்துப் பயந்து போயிருக்கும் மாகாணத் தமிழ் அலுவலரதும் அனுசரணையின் பேரில் இது நடைபெற்று வருகின்றது. ” என குற்றம் சாட்டினார்