மே மாதம் 16 ஆம் நாள் மாலை என் தேசம் முழுக்க இரத்தமும் பிய்ந்து போன சதை துண்டங்களுமாக தான் காட்சி தந்தது. இறந்த உடலங்கள் ஆயிரக்கணக்கில் சிதைந்து போய் கிடந்தன. அவற்றைத் தாண்டி நாம் வட்டுவாகல் பாலத்தை நோக்கி செல்கிறோம். அவற்றை இழுத்து எரிக்கவோ அல்லது புதைக்கவோ முடியாதவர்களாக மனசு முழுக்க வலிகளால் நிறைந்தும் எம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று ஓடுகிறோம்.
“என்னைத் தூக்கி கொண்டு போங்கோ அண்ண…
என்னை காப்பாத்துங்கோ அண்ண…
உங்கட தங்கச்சி என்றால் இப்பிடி விட்டிட்டு போவீங்களா?
தம்பி என்னையும் பிடிச்சுக் கொண்டு போடா …
வீதி ஓரமாக வாகனங்களைக்கு கீழும் வெற்றுத் தரையிலும் காயப்பட்டிருந்த போராளிகளும் மக்களும் அழுது குழறுவது செவிக்கு கேட்டாலும், என் தோளில் தலைசாய்த்துத் தூங்கும் 1-1/2 வயது பாலகனான மருமகனை காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பு அந்தக் குரல்களுக்கு செவிசாய்க்க விடவில்லை. அத்தனையையும் தாண்டி வட்டுவாகல் பாலத்துக்கு செல்கிறோம்.
இரவு பாலத்தில் இருந்து எமது கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த பிரதேசத்தில் இருந்த எல்லை வேலிக்கு பின் பகுதியில் எல்லோரும் தங்கி இருந்தோம். அடுத்த நாள் அதிகாலை 3-4 மணி இருக்கும் நாம் அனைவரும் வட்டுவாகல் பாலம் நோக்கி நடந்தோம் அப்போது,
திடீர் என்று காட்டுப் பகுதிக்குள் இருந்து வெளி வந்த சிங்களப்படை எம்மை நோக்கி துப்பாக்கியை சுட்டுத் தீர்த்தது. அந்த சூட்டுக்கு இலக்காகி ஒருவர் இறந்ததோடு மற்ற அனைவரும் அதிஸ்டவசாமாக உயிர் தப்பி இருந்தோம். அதன் பின்பு அங்கிருந்து ஒற்றை வரிசையாக கொண்டு செல்லப்பட்ட நாம் காலை விடியும் வரை வட்டுவாகல் பாலத்தில் அமர்த்தி வைக்கப்பட்டோம்.
அங்கிருந்த போது எனக்கு பின்னால் இருந்த எனது மைத்துனனுக்கு முல்லைத்தீவு இராணுவ முகாம் பகுதியில் இருந்து வந்த ரவை ஒன்று கழுத்துப் பகுதியில் படுகிறது. நல்லவேளையாக அது பெரும் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. அந்த ரவை மெல்லிய கீறலுடன் செயலிழந்து போன போது இரத்தத்தை கட்டுப்படுத்த ஏதோ ஒரு உடையை கிழித்து கட்டினோம். அதிகாலை விடிந்த போது அந்த பிரதேசம் எங்கும் வெளிச்சம் பரவிய போது வட்டுவாகல் பாலத்தின் கீழ் இருக்கும் நீருக்குள் பல உயிரற்ற வெற்றுடலங்கள் மிதப்பது கண்ணுக்குத் தெரிந்தபோது, அவ்வளவு நாட்களும் பல நூறு வெற்றுடலங்களை தாண்டி வந்தாலும் இவற்றை பார்த்த போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
காலை 6 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். எம்மை எழுப்பி உள்ளே வருமாறு அழைத்தது சிங்கள இராணுவம்.
என் தாயகத்தில் சுதந்திரமாக இருந்த விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எங்கும் தமது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தது சிங்கள இனவழிப்புப் படை. எம் தேசமெங்கும் சிங்கள தேசத்தின் இராணுவம் தனது பாதங்களைப் பதித்து நிற்கும் கொடிய காட்சியைக் கண்டு மனது வெம்பியபடி செல்கிறேன். மருமகன் பயத்தில் அழுது கொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்த முடியவில்லை. என் முன்னே அப்பா,அம்மா, அம்மம்மா, பின்னால் சித்தப்பா குடும்பமும் வந்து கொண்டிருந்தனர்.
இருவரும் நெஞ்சை நிமிர்த்தி யாரை எதிர்த்து இதுவரை களமாடினார்களோ அவர்களிடமே அடிமைகளாக சரணடையச் சென்று கொண்டிருந்தார்கள். இதுவரை இல்லாத வலியோடு இருபக்கமும் தொடர் நீளத்துக்கு அடிக்கப்பட்டிருந்த கம்பி வேலிக்குள் நடந்து கொண்டிருந்தோம். வட்டுவாகல் பாலம் கடந்து வலதுபக்கம் ஒரு மரத்தை தாண்டிய போது பழைய நினைவு ஒன்று வந்து சேர்ந்தது.
அன்றொருநாள் நான் நினைக்கிறேன் 2007 ஆம் ஆண்டென்று. நானும் என் நண்பனும் முள்ளியவளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். அது ஒரு நண்பகல் வேளை என்பதால் சனநடமாட்டமோ வாகனப் போக்குவரத்துக்களோ மிகக் குறைவாக இருந்தது. ஓரிரண்டு உந்துருளிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன. அந்த இடத்தில் தான் இரண்டு ஆண்கள் மது போதையில் வந்து மரத்தோடு மோதி இரத்தம் சிந்திய நிலையில் குற்றுயிராய் கிடந்தனர். மிகவும் கவலைக்கிடமாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு முதலுதவி கூட செய்ய முடியாத நிலை. கண்முன்னே அடிபட்டு வீழ்ந்தவர்களை எமது உந்துருளியில் கொண்டு செல்ல முடியாத நிலை. வந்த ஒரு ஆட்டோவில் அதி தீவிர சிகிச்சை வழங்கப்பட வேண்டிய நிலையில் இருந்த ஒருவரை ஏற்றி அனுப்பிவிட்டு கூடவே என் நண்பனையும் அனுப்பிவிட்டு, மற்றவரை ஏற்றுவதற்கு ஏதாவது ஒரு வாகனம் வருமா என்று இரண்டுபக்கமும் பார்த்துக் கொண்டிருந்த போது, ஒரு இராணுவ வர்ணம் பூசப்பட்ட கறுப்புக் கண்ணாடிகளாலான பஜூரோ ரக வாகனம் வந்தது. அது முக்கிய பொறுப்பாளர் ஒருவரது வாகனமாக இருக்க வேண்டும். அதற்குள் இருந்தவர் யார் என்று பார்க்க முடியவில்லை என்றாலும் மிக முக்கிய போராளி ஒருவருடையது என்று எம்மால் ஊகிக்க முடிந்தது.
ஆனாலும் வாகனம் எம் அருகில் நின்றதும் எந்த விசாரணைகளுமற்று காயமடைந்தவரை ஏற்றிக் கொண்டு சென்றதும். ஒவ்வொரு தமிழ்மகன் மீதும் எமது தளபதிகள் பொறுப்பாளர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள கூடியவாறு இருந்தது. தனக்கு ஆபத்துக்கள் இருப்பதை மறந்து ஒரு சாதாரண பொதுமகனுக்காக அந்தத் தளபதி தனது வாகனத்தை வீதியில் நிறுத்தினார் என்றால் எம்மக்களின் முன் தமது உயிர் துச்சம் என்ற நிலைப்பட்டை போராளிகள் கொண்டிருந்தார்கள் என்பதே நியம்.
இப்போது அந்த பொறுப்பாளரின் அல்லது அந்த வாகனத்தில் வந்த போராளியின் நிலை…? நான் அறியேன். ஒருவேளை அதே தமிழ் மகனுக்காக தனது உயிரை மண்ணுக்குள் விதையாக்கி இருக்கலாம் அல்லது விதையாக போகத் தயாராக இப்போதும் அனல் பறக்கும் ஆயுதத்தை தனது கரங்களில் வைத்துக்கொண்டிருக்கலாம். உடலில் வெடிமருந்தாடையைக் கட்டிக் கொண்டு எப்போதும் வெடிக்கத்தக்க வகையில் தயாராக இருக்கலாம். இவற்றில் எதுவோ ஒன்றுதான் நியமானதாக இருக்கும். மனது அந்தப் போராளியை நினைத்துக் கொண்டு நகர்ந்தது.
அப்போது, எனது முதுகில் ஏதோ ஒன்றால் அடித்ததுக்கான வலி எனக்கு எழுந்தது. திடுக்கிட்டு போய் நிமிர்கிறேன். கனரக ஆயுதங்களுடன் சில இராணுவத்தினர் நிற்கின்றார்கள். தொடர்ந்து என் முதுகில் அடி விழுந்தது. என் நாரிப்பக்கமும் அதற்கு கீழும் அவன் அடித்த வலி பயங்ரமாக இருந்தது. பெரிய தடி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தான். அவனுக்கு நாம் அடிமாடுகளைப் போல அல்லது விசர் நாய்களைப் போலத் தோன்றியிருக்க வேண்டும் அதனால் தான் மனிதமற்று அவ்வாறு அடிக்கிறான்.
தோழில் தலை சாய்த்து கொண்டிருந்த எனது மருமகன் வீறிட்டு அழுகிறான் அடுத்த அடி விழ முன் நான் முன்னே சென்றிருந்தேன். கடைக்கண்ணால் அந்த இராணுவத்தைப் பார்த்தேன். ஏதோ சிங்களத்தில் கத்தியவாறு முறைக்கிறான். நான் அடிபட்ட வலியோடு நடக்கிறேன். முன்பொருகாலம் இவர்கள் எங்களின் கரங்களுக்கு பயந்து ஓடிய போது நெஞ்சை நிமிர்த்தி நின்ற எம் தமிழினம் இன்று கூனிக்குறுகி, அடிவாங்கி, துன்பப்பட்டு, தனது மானமிழந்து, அடிமையாகி அவனின் காலடியில் விழுந்து நிற்கிறது. இதுவே பட்ட அடியை விட வலியைத் தந்தது.
பின்னால் யாரோ அலறும் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கப் பயந்தாலும் சித்தப்பாவின் குரல் கேட்டதால் திரும்பிப் பார்க்கிறேன். அங்கே அவரும் அடி வாங்கியதைக் கண்டேன். பாவம் அவர் ஏற்கனவே எறிகணையால் இரண்டு முறை முதுகில் காயப்பட்டிருந்தார். அக்காயத்தில் தான் இப்போது அந்த படைச் சிப்பாய் அடித்திருப்பான். அதனால் தான் அவ்வாறு அலறினார். என் விழிகள் கலங்கின. மனமோ பதட்டமாக இருந்தது. இவர்களிடம் அடிவாங்கி சாவதை நினைக்க முள்ளிவாய்க்காலில் செத்திருக்கலாம் எனத் தோன்றியது. அவன் வந்து கொண்டிருந்தவர்களுக்கு அடித்துக் கொண்டே இருந்தான். ஆண் பெண் வேறுபாடில்லை தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் அலறுவதும் அவனின் உறுமலும் செவிகளில் விழுந்து கொண்டே இருக்கிறது. மிக நீண்ட தூரம் எனது உறவுகளில் பலர் காயப்பட்டிருந்த காரணத்தால் நடக்க முடியாது தவிக்கிறார்கள். ஆனால் நடந்தே ஆக வேண்டும். நாம் நடந்து கொண்டே இருக்கிறோம்.
அப்போது
“மாமா அப்பாவும், அம்மாவும் எங்க மாமா? வரமாட்டினமே? “
நான் தூக்கி வந்து கொண்டிருந்த என் மருகனின் 4 வயது நிரம்பிய சகோதரியான என் மருமகள் வினவுகிறாள். அவர்களின் நிலை என்ன என்பதை நான் அறியேன். எனது சிறிய தந்தையின் மகளான எனது தங்கை அவளைச் சமாதானப்படுத்துகிறாள்.
“அம்மாவும், அப்பாவும் மருந்து கட்ட போயிருக்கினம். அவை மருந்து கட்டின பிறகு வருவினம். “
அவளின் சமாதானத்தை அவள் நம்பவில்லைப் போல. சின்னவள் அழுது கொண்டே வந்தாள். நாங்கள் செய்வதறியாது நடந்து கொண்டே இருந்தோம்.
இருபக்கமும் அடிக்கப்பட்டிருந்த கம்பி வேலி ஒர் இடத்தில் விரிவடைந்து பெரிய பிரதேசமாகக் காணப்பட்டது. முல்லைத்தீவு என்று தெரிந்தாலும் அதை எந்தப்பகுதி என்று உடனடியாக இனங்காண முடியாத அளவுக்கு மாறி இருந்தது. நான் நினைக்கிறேன் அதுவே எமக்கான பொறிக்கிடங்கு வெட்டப்பட்ட பகுதி. அங்கு தான் எம்மவர் பலர் காணாமல் போனார்கள். அந்தப் பகுதிதான் எம்மவர்கள் துயிலுரியப்படக் காரணமான பகுதி.
அங்கு தான் நான் நண்பர்கள் உறவுகள் என பலரை இறுதியாக கண்டேன்.
“டேய் கவனமா போடா தம்பி. எப்பவும் சின்னவன கீழ இறக்காத அவனைத் தூக்கி கொண்டே போ. “
“நீ பயப்பிடாத பாதர், நடேசண்ணையாக்கள் வெளிநாடுகளோட கதைச்சுத் தான் சரணடைய போறாங்கள். அதனால எந்த பிரச்சனையும் இருக்காது, நாங்கள் பாதராக்களோட போகப்போறம் “
என்றெல்லாம் அறிவுரை கூறிய என் உறவுகளைப் பிரிந்த இடம். எமக்கு அப்போது எதுவும் புரியவில்லை. நாம் ஏதோ ஒரு பதட்டமாகவே காணப்பட்டோம். எங்கு பார்த்தாலும் எம் உறவுகள் குவிந்து கிடந்தார்கள். போராளிகளும் மக்களுமென அந்த இடமே சன நெரிசலால் திணறியது. உணவில்லாது தண்ணீர் இல்லாது மக்கள் மயக்க நிலையில் ஆங்காங்கே விழுந்து கிடந்தார்கள். பல நாட்கள் தூக்கமின்றிய விழிகளுக்கு அது ஓய்வைக் கொடுத்திருக்கலாம். ஆனாலும் என்னால் உறங்க முடியவில்லை. மனம் பயத்துடனும், வலியுடனும் அந்தரித்துக் கொண்டிருந்தது.
மஞ்சள் சிகப்பு வர்ணக் கொடிகளை உயரத் தூக்கி எம் தேசியக் கொடியினை எம் கரங்களில் உரிமையோடும், உணர்வோடும் அணைத்துக் கொண்டு தலைவனின் படத்தை நெஞ்சோடு அணைத்தபடி எம் பலத்தை சர்வதேசத்துக்கு சொல்வதற்காக அணியணியாக ஊர் முழுக்க சேர்ந்து “பொங்குதமிழாய் ” எழுந்து நின்றோமே… அந்த கூட்டம் நினைவுக்கு வந்தது. அப்போது இருந்த உணர்வுகளுக்கும், இப்போது இருக்கும் உணர்வுக்கும் பல ஆயிரம் மடங்கு வித்தியாசத்தை நான் உணர்ந்தேன்.
அந்த உணர்வுகள் எல்லாம் செத்து உயிருடன் உறவாட ஏதோ எம் உடல் மட்டும் இயங்கிபடி அந்த பரந்து விரிந்து கிடந்த கம்பி வேலிக்குள் ஒருவரை ஒருவர் பார்க்கவோ, பேசவோ முடியாதவர்களாக தலையில் துண்டு அல்லது சாறத்தை முக்காடாக போட்டு மறைத்தபடி அந்த வெட்டைவெளியில் எதுவும் அற்ற நடைப்பிணங்களாக இருந்தோம்.
ஒருபுறம் பசி, மறுபுறம் தாகம்; இன்னொருபுறம் எம்மைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் எறிகணை மற்றும் தாக்குதல்கள் எம் விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களை முற்றுமுழுதாக அழித்துவிடுமோ? அல்லது நடந்து கொண்டிருந்த சண்டையை உடைத்தெறிந்து போக வேண்டியவர்கள் போய்ச் சேர்ந்திருப்பார்களோ? என்று வேதனை எழுந்தது. அதே நேரம் இங்கே இனி என்ன நடக்க போகின்றது என்பது தெரியாத பயம் என்று பல உணர்வுகளோடு விழிகளில் இருந்து பயமும் கண்ணீரும் வழியக் காத்திருந்தோம்.
அவற்றையும் தாண்டி என் மருமகனின் குரல் ஒலிக்கிறது.
“மாமா பசிக்குது மாமா… “
பேசமுடியாத மழலை தன் உதடுகள் பிரித்து அழுத குரலுக்கு தண்ணீரைக் கூடக் குடுக்க முடியாதவனாக அழுததை இன்றும் மறக்க முடியாது வலிக்கிறது.
எழுதியவர்: இ.இ.கவிமகன்
23.05.2021