வன்னிமண் அழகான பூமி. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தாலும், வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தாலும், நீல மேகங்களில் தவழும் வெண்ணிற முகில் கூட்டங்களின் அழகாலும், நெய்தல் காடாகச் சுற்றிக் கிடக்கும் பேரலைகளோடு முட்டி மோதும் கடலாலும் சூழ்ந்து வன்னி மண் அழகாகக் கிடந்தது. கிரவல் வீதிகளாலும், குன்றும் குழியுமாக கிடந்த பழைய காலத்து தார் வீதிகளாலும், பாரிய குளங்களாலும் வன்னியின் அனைத்துப் பிரதேசமும் பச்சைப்பசேல் என்று மனதுக்கு நிறைவானதாக நிறைந்து கிடந்தது.

அங்காங்கே ஒரு வீடும் சின்னச் சின்னக் கடைகளும், ஓரிரண்டு பயணிகளின் துவிச்சக்கரவண்டிகளாலும் வீதிகள் நிறைந்து வெறிச்சோடிக் கிடந்தன. இதுவா வன்னி என்று யோசிக்கவும், அப்பப்பா என்ன அழகடா வன்னி என்று வியக்கவும் வைக்கும் ஒரு அதிசய பூமி. இப் பூமியில்தான் தமிழீழ அரசின் நிழல் அரசு ஒரு காலத்தில் தமிழீழ மண்ணை ஆண்டது. அவ்வாளுகையின் ஒரு காலம் தான் 1995-2009 ஆண்டுத் தொடர்ச்சி.


1995 ஐப்பசி மாதம் 31 ஆம் நாள் யாழ் மாவட்டத்தின் வலிகாம வலயம் ஒற்றை இரவில் கைதடிப் பாலத்தால் இடம்பெயர்ந்த அவலத்தின் ஈரம் காயும் முன்பே 1996 ஆம் வருடம் பிறந்து, நாலு திங்கள்கள் ஓடி மறைந்த சில நாட்கள். தன் சனத்தொகையைத் தாங்கும் ஆளுமையையும் தாண்டி அதிகமான மக்கள் தொகையைத் தாங்கிக் கொண்டிருந்தது வன்னியின் பிரதேசங்கள் ஒவ்வொன்றும். புதிது புதிதாக பல ஆயிரம் குடில்கள் முளைத்திருந்தன. பல லட்சம் புதியவர்கள் தம்மை வன்னிப் பிரதேசங்களில் புதிய குடியாளர்களாக கொள்ளத் தொடங்கினார்கள். சூரியக்கதிர் -1/2 நடவடிக்கைகள் மூலமாக யாழ்ப்பாணம் தனது இருப்பைத் தொலைத்து தனது குடியானவர்கள் இடம்பெயர்ந்த கொடுமையான நிகழ்வைத் தாங்க மாட்டாது அழுது கொண்டிருந்தது.

வயல் வெளிகள், வெற்றுக் காணிகள், வீதிகள், பள்ளிகள், ஆலயங்கள் என்று வித்தியாசமின்றி மக்கள் குவிந்து கிடந்தனர். திடீரென அதிகரித்த புதிய குடியாளர்களால் திணறத் தொடங்கி இருந்தது. உணவு, இருப்பிடம், மருத்துவம் என அனைத்தையும் “பொருளாதாரத் தடை” என்ற பெயரில் அன்றைய சிங்கள அரசத்தலைவர் சந்திரிக்காவினால் தடுக்கப்பட்டிருந்த போது திடீரென ஏற்பட்டிருந்த சனத்தொகை அதிகரிப்பைச் சமாளிப்பது என்பது வன்னி மண்ணுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் அவசரம் அவசரமாக மக்கள் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அரசியல் துறையாலும் மக்கள் நேயப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமூகமேம்பாடு மற்றும் ஏனைய பிரிவுகளாலும் குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
கல்வி, மருத்துவ வசதிகள் எனப் படிப்படியாக தமிழீழத் தேசியத்தலைவரின் பணிப்பில் அத்தனையும் வன்னியில் உருவாக்கப்பட்டன அல்லது மெருகேற்றப்பட்டன. தம் சொந்த ஊரினைப் பிரிந்து தமிழீழ விடுதலையை நேசித்த மக்களாக அங்கே திரண்டிருந்தவர்களை ஆற்றுகைப்படுத்தும் செயற்பாடுகளும் நடந்தேறின. இவை மக்களிடையே சிறிய நிம்மதியை ஏற்படுத்தினாலும் சனத்தொகை நெருக்கம் அங்கே மிகப் பெரிய சிக்கல்களை உருவாக்கத் தொடங்கியது.

எற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் மலேரியா போன்ற தொற்று நோய்களை அழிக்க முடியாத பிரதேங்கள் என்று அறிக்கையிடப்பட்டிருந்த இப்பிரதேசங்கள், நெருக்கமான குடியிருப்புக்கள், ஒழுங்கான மருத்துவ வசதிகள், குடிநீர் வசதிகள் என்று எதுவுமே சீராக இல்லாத காரணத்தால் தொற்றுநோய்ப் பரம்பலை ஏற்படுத்தத் தொடங்கி இருந்தது. வாந்திபேதி, மலேரியா போன்ற கொடுமையான நோய்கள் வன்னியில் பரவத் தொடங்கின. இதன் கொடுமையான தருணங்கள் மரணங்களாக வன்னி எங்கும் பிணங்கள் வீழ்ந்தன.

கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான மலேரியா நோயாளிகள் சாவடைந்த துயரம் பதிவாகியது. அங்கே ஏற்கனவே இருந்த அரச மருத்துவத்துறையாலோ அல்லது தமிழீழ சுகாதாரப்பிரிவாலோ உடனடியாக அந்தத் தொற்றுப் பரம்பலை தடுப்பது என்பது மிக சவாலாக இருந்தது. ஆனாலும், அதை எவ்வாறாகினும் தடுத்தே ஆக வேண்டிய நிலையில், தமிழீழத்தில் இயங்கிய அரச மற்றும் தமிழீழ மருத்துவத்துறை இருந்தது. இல்லையெனில் சிங்கள வல்லாதிக்க அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைக்கு முன்பாக எம் மக்கள் அநியாயமாக மலேரியா போன்ற கொடுமையான நோய்களால் பலியாகி, எம்மினத்தின் சுவடே இல்லாமல் போய்விடும் அபாயம் அங்கே உருவெடுத்திருந்தது.

அதற்காக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் காலங்களில் தமிழீழச் சுகாதாரசேவைகள் பணிப்பாளராக இயங்கிய மருத்துவ கலாநிதி சுஜந்தன் அவர்களின் தலைமையில் “மலேரியாத் தடுப்பு இயக்கம் “ உருவாக்கப்பட்டது. இது கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொறுப்பாக இருந்தாலும், இதற்குள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களைச் சார்ந்த சில பிரதேசங்களும் உள்வாங்கப்பட்டிருந்ததால் தமிழீழ அரசின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இருந்த அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக பணிகளைச் செய்தது.

இவ்வியக்கத்தின் கீழ் பூச்சியியல் ஆய்வுப் பிரிவும் இயங்கத் தொடங்கியது. ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு அறிக்கையின்படி மலேரியாவை இல்லாது அழிக்க முடியாத பிரதேசங்களாக இனங்காட்டப்பட்ட இப்பிரதேசங்களில் இருந்து மலேரியாவை இல்லாது ஒழிக்கும் செயற்பாடானது சாதாரணமானதில்ல. ஆனாலும், தமிழீழ மருத்துவ அணி பின் நிற்கவில்லை. அந்த நேரம் உலக சுகாதார நிறைவனத்தின் ஏற்பாட்டின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் உலகெங்கும் முடக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் தமிழீழத்தில் தமிழீழ மருத்துவ அணி இதற்கான பணிகளை தீவிரப்படுத்தத் தொடங்கி இருந்தது.

சுகாதார வைத்திய அதிகாரியாக முல்லைத்தீவிலும், பின்னர் கிளிநொச்சியிலும் பணியாற்றி பின் நாட்களில் தமிழீழ சுகாதார சேவைகள் மேலாளராகவும் இருந்த வைத்திய கலாநிதி சுஜந்தன், தமிழீழ சுகாதார சேவைகளின் பணிப்பாளராக இருந்த மருத்துவக்கலாநிதி சூரியகுமாரன், வைத்திய கலாநிதி விக்கினேஸ்வரன். மலேரியாத் தடுப்பியக்கப் பணியாளர்கள், தொண்டர்கள், அரச பொது சுகாதாரப் பரிசோதகர்கள், தமிழீழ பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மாவட்டத் தமிழீழச் சுகாதாரச் சேவை பொறுப்பாளர்கள், போராளிகள்தமிழீழ மருத்துவக்கல்லூரி மாணவர்கள்,தமிழீழ அரசியல் துறை, காவல் துறை கலைஞர்கள், ஊடகங்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் எனப் பலர் இணைந்த கூட்டுச் செயற்பாடுகளாக பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எமது தேசிய ஊடகங்களாக இருந்த புலிகளின் குரல் மற்றும் ஈழநாதம் நாளிதழ் ஆகியவை தினமும் மலேரியா பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடையே விதைத்த வண்ணம் இருந்தன. தமிழீழ மருத்துவப்பிரிவின் “விழி “ மருத்துவ இதழ் இவற்றைப்பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தெருவெளி நாடகக் கலைஞர்கள் தமது நாடகங்களின் நடுக் கருத்துக்களாக தொற்றுநோய்த் தாக்கங்களின் தன்மைகளை எடுத்து ஊர் ஊராக, கிராமம் கிராமமாக , வீதி வீதியாக மக்களிடையே மலேரியாவையும், கொலராவையும் ஏனைய தொற்றுநோய்களையும் கட்டுப்படுத்தும் நாடகங்களை நடித்தார்கள். அதனூடாக விலைமதிக்க முடியாத கருத்துருவாக்கங்களை மக்களிடையே கொண்டு சென்றார்கள்.

மருத்துவத்துறையினர் கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான கண்காட்சிகளை நடாத்தினார்கள். ஒவ்வொரு பாடசாலைகளும் மருத்துவ விழிப்புணர்வு கொண்ட கருத்துக்களை விதைக்கக் கூடிய இடமாக இருந்ததால் மருத்துவப்பிரிவுப் போராளிகள், அரச மருத்துவத் திணைக்கள பணியாளர்கள் என ஒன்றிணைந்த அணி அனைத்துப் பாடசாலைகளிலும் விழிப்புணர்வு கருத்தரங்குகளினூடாக மாணவர்களிடையே தனிநபர் சுகாதாரத்தை வளர்த்தார்கள்.

மலேரியாத் தொற்று எப்படி உருவாகின்றது அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் போன்ற பல விடயங்கள் அங்கே போதிக்கப்பட்டன. அதில், மலேரியா ஒட்டுண்ணிகள் பற்றியும் அவை எவ்வாறு மனிதர்களிடையே கடத்தப்படுகின்றது என்பது பற்றியும் மாணவர்களிடையே விளக்கப்பட்டன. இதேநேரம் அரச மருத்துவ அணிகளில் இருந்த பூச்சியியல் ஆய்வு பகுதி நுளம்புகளை ஆய்வு செய்து பல முடிவுகளையும் கண்டறிந்திருந்தன.

அனாஃபிலிஸ் ( Anopheles) என்ற பெயருடைய ஒரு பெண் நுளம்பின் குருதி உணவுச் செயற்பாட்டின் மூலமாகவே, இந்த நோய்த் தாக்கம் ஏற்பட்ட ஒரு நோயாளியின் குருதியைக் குடிக்கும் இந்த வகை பெண் நுளம்பு அந்த நோயாளியின் குருதியில் கலந்திருக்கும் நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய Plasmodium என்ற ஒரு கலம் அந்த நுளம்பின் குருதியைக் குடிக்கப் பயன்படும் ஊசி வடிவிலான உடலுறுப்பினூடாக உட்சென்று தங்கி விடுகின்றன.

பின்பு நோய்த்தாக்கம் இல்லாத ஒரு மனிதனின் உடலில் அந்த நுளம்பு குருதியை குடிக்கும் போது அந்த நுளம்பின் உமிழ்நீரோடு சேர்ந்து அந்த மனிதனின் குருதியோடு Plasmodium கலம் புகுந்து ஈரலில் இருக்கும் கலன்களை சென்றடைவதையும், அங்கே இந்த Plasmodium பெருகத் தொடங்கி குருதியின் செங்குருதிச் சிறுதுணிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த செயற்பாட்டுத் தாக்கம் கிட்டத்தட்ட 10 இல் இருந்து 14 நாட்களுக்குள் நோயற்ற உடலிலும் நோய் அறிகுறி வெளிப்படுத்தப்படும் இவ்வாறான தாக்கம் ஏற்படும் போது, குளிருடன் கூடிய காச்சல், வாந்தி, அதிகமான தலைவலி போன்றவை அறிகுறிகளாகத் தென்படும். இந்த அறிகுறிகளே மலேரியாவுக்கான அடிப்படைக் குறிகளாக இருக்கும் அதனால் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதும் உடனடியாக மருத்துவ நிலைகளை நாட வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினார்கள் மருத்துவர்கள்.

அதோடு மட்டுமல்லாது, Anopheles என்ற பெயருடைய இந்த நுளம்புகளின் பெருக்கத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?

சாதாரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பு நீர்நிலைகளால் நிறைந்த பகுதி அதனால் இந்த வகை நுளம்புகளின் பரவலைத் தடுப்பதென்பது அசாதாரணமானது. ஓடும் நீர்நிலைகளில் நுளம்புப் பரவல் இருக்காது தேங்கும் நீர்நிலைகளில் நிச்சயமாக இனப்பெருக்கம் இருக்கும். அதனால் அவ்வாறு இருக்கும் நீர்நிலைகள் இனங்காணப்பட்டு இல்லாமல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். அதாவது, மழைநீர் தேங்கிக் கிடக்கும் சிறு குட்டைகள், தகரப்பேணிகள், சிரட்டைகள், சிறு போத்தல்கள் மற்றும் வாகன டயர்கள் சிறிய வாய்க்கால்கள், குழிகள் போன்றவற்றினை அகற்றுவதன் மூலமாக இந்த நுளம்புப் பரம்பலை நிறுத்த முடியும் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதை விட சுட வைத்து ஆறிய நீரினை பருக வேண்டும் என்றும், மலம் கழித்தபின்பும், உணவு உண்ண முன்பும் கட்டாயமாக சவர்க்காரம் போட்டு கைகள் அலம்ப வேண்டும் என்றும், தற்காலிகமாக என்றாலும் கழிவறைகளை அமைத்து பயன்படுத்த வேண்டும். நுளம்பு வலைகள் அல்லது நுளம்புகளை விரட்டக்கூடிய செயற்கை நுளம்புச் சுருள்களோ அல்லது இயற்கையான கஞ்சாங்கோர, வேப்பிலை போன்ற மூலிகைச்செடிகளையோ பயன்படுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் மாணவர்களையும், மக்களையும் கட்டாயப்படுத்தினார்கள்.

கருத்துக்களை விதைத்தார்கள் என்பதை விட கட்டளையிட்டார்கள் என்பதே சரியானது. இதே நேரம் காடுகளுக்குள் வாழ்ந்த போராளிகளும் சில மக்களும் யானையின் காய்ந்த சாணகத்தை நெருப்புமூட்டி புகைக்க வைத்து இந்த நுளம்புக் கடியில் இருந்து தம்மைப் பாதுகாத்தார்கள். வேப்பம் பட்டை அல்லது வேரினை அவித்து குடிப்பதன் ஊடாகவும் சிறிதளவு நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க முடியும்.

தடுப்பு மருந்தாக கொள்ளக்கூடிய Daraprim மாத்திரை வாரத்தில் இரண்டு என்ற விகிதத்தில் உள்ளெடுக்கவும் பரிந்துரைத்தார்கள் அல்லது Chloroquine மாத்திரையில் இரண்டு தடுப்பு மாத்திரையாக பயன்படுத்தவும் சொன்னார்கள். இப்படியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்க, இவ்வாறான செயற்பாடுகள் மக்களுக்குள் நடக்கின்றனவா என்பதை கண்காணிக்கவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளையும் சுகாதாரப் பணிகளையும் செய்வதற்காக ஏற்கனவே அரச பணியாளர்களாக இருந்தவர்களோடு இணைந்து செயற்படக் கூடிய தமிழீழ சுகாதாரப்பரிசோதகர்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டு நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மக்களுக்குள் மக்களாக இறங்கி பணியாற்றத் தொடங்குகின்றனர். அதே நேரம் அங்கே இலங்கைச் செஞ்சிலுவைச்சங்கத் தொண்டர்களும் பயிற்சி கொடுக்கப்பட்டு தயார்படுத்தப்படுகிறார்கள். வீடு வீடாகச் சென்று, தேவையற்று நீர் தேங்கக் கூடிய இடங்கள் என இனங்காணப்பட்டவற்றை எல்லாம் அகற்றினார்கள்.

தேவையான இடங்களுக்கு “மலத்தியோன் “ அல்லது “ Vectron “ போன்ற மருந்துகளை தெளிகருவிகள் மூலமாக இலங்கை சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த பணியாளர்களும் தமிழீழ சுகாதாரசேவைகள் பிரிவைச் சேர்ந்த பணியாளர்களும் தெளித்து இவ்வகை நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தினர். இவர்கள் மருந்து தெளிப்பவர்கள் என்று மட்டும் இல்லாது, வீடு வீடாக மலேரியா பற்றிய கருத்துக்களை கூறக் கூடியதாகவும் சுகாதாரசேவைகள் பணிமனையால் பயிற்சி கொடுக்கப்பட்டுத் தயார்ப்படுத்தப்பட்டிருந்தனர். அதனால் மக்களை மேலே குறிக்கப்பட்டிருந்த தற்காப்பு நடவடிக்கைகளை கட்டாயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமல்லாது அவர்களை கண்காணித்தார்கள்; செய்வித்தார்கள்.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மக்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கக் கூடிய செயற்பாடுகளைச் செய்ய வேண்டிய சூழல் கட்டாயமாக எழுந்தது. அதற்காக பல நடவடிக்கைகள் செய்யப்பட்டன. அதில் முக்கியமாக,

1. வன்னி சிறார் பட்டினிச்சாவு தவிர்ப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை தமிழர் புனர்வாழ்வுக் கழ்கம் மற்றும் தமிழீழ நிர்வாக சேவை ஆகியன ஒருங்கிணைக்க, அதன் நடவடிக்கைகளை இலங்கை ஆள ஊடுருவும் படையணியின் கிளைமோர்த் தாக்குதலில் சாவடைந்த வனபிதா கருணாரட்ணம் அடிகளார் ( கிளி பாதர் ) பொறுப்பெடுத்து சிறப்பாகச் செய்தார். இதற்கான முழு நிதிப் பங்களிப்பையும் அப்போதைய வெரித்தாஸ் வானொலி பணிப்பாளராக இருந்த ஜெகத்கஸ்பார் அடிகளார் சர்வதேச அளவில் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு செய்தார்.

இதனூடாக அநேகமான பிரதேசங்களில் பசி போக்கும் போசாக்குள்ள உணவுகள், இலைக்கஞ்சி, சத்துணவுகள் என்று நோய் எதிர்ப்புசக்தியை தரக்கூடியதான உணவுகள் வழங்கப்பட்டன. மருத்துவக் கலாநிதி சுஜந்தன் அவர்களின் கண்காணிப்பில் போசாக்குள்ள உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவை எவ்வகையில் மக்களுக்கு போசாக்குள்ள உணவாகவும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடிய உணவாகவும் இருக்க வேண்டும் என்பதில் மருத்துவர் சுஜந்தன் அவதானமாக செயற்பட்டார். உணவு வழங்கப்படத் தொடங்கிய பின் அப் பயனாளிகளின் நிறை, போசாக்கு, உடலியல் தன்மை போன்றவற்றை அவதானித்து வந்தார். இதனூடாக போசாக்கற்ற சிறுவர்களும் தாய்மார்களும் தமிழீழத்தில் இருப்பதை பெருமளவு குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அவர்களின் உடலிலே உருவாக்கி அவர்களை திடமானவர்களாக மாற்றினார்கள்

2. ஐநாவின் உப அமைப்புக்களின் ஒன்றான “உலக உணவுத்திட்டம்” (World Food Program) வன்னிக்குள் கொண்டு வருவதற்காக முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் “தேவைப்பகுப்பாய்வு அறிக்கை “ இல்லாமல் தம்மால் வன்னிக்குள் வந்து பணியாற்ற முடியாது என்று கூறி மறுத்தார்கள். அதனால் தேவைப்பகுப்பாய்வு செய்யப்பட்ட அறிக்கையை கேட்டார்கள். தேவைப் பகுப்பாய்வு நிபுணராக மருத்துவக்கலாநிதி சுஜந்தன் நியமிக்கப்பட்டு, வன்னி முழுவதுக்குமான தேவைப்பகுப்பாய்வு செய்யப்பட்ட அறிக்கை வழங்கப்படுகிறது. அந்த அறிக்கைக்குப் பின்பு உலக உணவுத் திட்டம் தனது பணியை அங்கே ஆரம்பிக்கிறது.

3. ஏற்கனவே அரசியல்துறையின் சமூகமேம்பாட்டுப் பிரிவின் கீழ் போசாக்குப் பராமரிப்புப் பூங்காக்கள் என்று இயங்கிய சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் மெருகூட்டப்பட்டன. இவ்வாறு மக்களுக்கான போசாக்குப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இவை நிச்சயமாக மக்களுக்கு இவை பசியை போக்கியது மட்டுமல்லாது போசாக்கையும் கொடுத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது என்றால் பொய் இல்லை.

இப்போது பல போராளிகளுக்கும் இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு தனிநபர் சுகாதார விடயங்கள் அடிப்படைப் பயிற்சி முகாம்களிலேயே கற்பிக்கப்பட்டு இவ்வகையான பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியதன் அவசியங்கள் உணர்த்தப்பட்டிருந்தன.இந்த இடத்தில் தமிழீழத்தின் மருத்துவர் மருத்துவக்கலாநிதி எழுமதி கரிகாலன் அவர்களின் பணியை மறக்க முடியாது. மக்களுக்குள் மட்டுமல்லாது போராளிகளுக்குரிய தனிநபர் சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதில் மிக முக்கிய பங்குள்ளவர். அதே நேரம் அனைத்து முகாம்களிலும் மக்களிடையே நுளம்புப் பெருக்கத்தை தடுக்கும் செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டது போலவே செய்யப்பட்டன.

உதாரணத்துக்கு, அந்தக் காலம் ஜெயசிக்குறு என்ற பெயரிலும் சத்ஜெய என்ற பெயரிலும் எம் மண்ணை இரண்டாக துண்டிக்க நினைத்து இராணுவ நடவடிக்கையைச் செய்து கொண்டிருந்தது சிங்கள தேசம். நான் அறியக் கூடிய வகையில் மணலாறில் இருந்து ஒட்டிசுட்டான் மாங்குளம் வவுனிக்குளம் ஊடாக பெரியமடு வரை நீண்டு கிடந்த அந்த எல்லை வேலியில் பல ஆயிரம் போராளிகள் தம் உயிர்களைத் துச்சமென மதித்து காவலர்களாக காத்துக் கிடந்தார்கள். அதே நேரம் வன்னியின் வட போர்முனைப் பக்கமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்த எல்லை வேலி என அத்தனை நிலைகள் எங்கும் இந்த மலேரியா காச்சலின் தாக்கம் போராளிகளை பெரிதும் பாதித்துக் கொண்டே இருந்தது.

அதனால் எல்லை வேலியெங்கும் இந்த நுளம்பின் பெருக்கத்தை தடுக்கும் வகையில் மருத்துவப் போராளிகளின் அணி ஒன்று பல கிலோமீட்டர் தூரமாக நீண்டு கிடந்த எல்லை வேலி எங்கும் நுளம்பின் இனப்பெருக்கத்தை தடுக்கக் கூடிய மலத்தியோன் அல்லது Vectron என்ற மருந்தை தெளிகருவிகள் மூலம் தெளித்து அந்த நுளம்பின் பெருக்கத்தை தடுத்தார்கள். இவ்வாறு ஒருபுறம் விழிப்புணர்வு செயற்பாடுகளில் அல்லது தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள் ஈடுபட்டு வந்தாலும், அதிகரித்துக் கொண்டிருந்த நோய்த்தாக்கம் வன்னியின் அநேகமான மருத்துவநிலைகளில் மக்களை நிறைத்து வைத்திருந்தது.

தடுப்பு மருந்துகளோ நோய் நிவாரணிகளோ உடனடியாக கிடைக்காது தவிக்கத் தொடங்கினர் மக்கள். ஆனால் மருத்துவத்துறையினரோ தளராது செயற்பட்டார்கள். குளோரக்குயின் (Chloroquine) , பிரிமாக்குயின் (Primaquine) போன்ற மருந்துகளை நோய் நிவாரணிகளாக மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த மருந்துகள் நோய்த் தொற்று ஏற்பட்டதை உறுதிப்படுத்திய உடனேயே ஐந்து நாட்களுக்கு பயன்படுத்தக் கூடியதாக மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். அதாவது, முதலாம் நாள் Chloroquine 4, இரண்டாம் நாள் 4, மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள் 2 மாத்திரைகள் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டன அதே நேரம் தினமும் 2 Primaquine வீதம் 7 நாட்கள் இரவில் வழங்கப்பட்டன. இம்மாத்திரைகள் மருத்துவர்களின் பரிந்துரையற்று பயன்படுத்துவது ஆபத்தை தரக்கூடியது. அதே நேரம் இம்மாத்திரைகள் அதிகளவு பயன்படுத்தும் போது மலேரியாவில் இருந்து காப்பாற்றினாலும் உடலில் சோர்வுத்தன்மையை உருவாக்கிப் பயன்பாட்டுக் காலங்களில் நோயாளிகள் அதிகமாக பயன்படுத்துவதால் உடலில் அதிகமான தலைவலி, தோலரிப்பு, வலிப்பு, வாந்தி, பார்வை மங்குதல், இதயப் பிரச்சனைகள் போன்றவற்றையும் உருவாக்க வல்லது.

அதனால் இம் மாத்திரைகள் மருத்துவர்களின் அனுமதியின்றி உள்ளெடுக்கத் தடை விதிக்கப்பட்டது. அல்லது, Chloroquine மருந்து ஊசிகள் மூலம் ஏற்றப்பட்டது. இது அதிகளவு பயன்பாட்டில் இல்லாது இருந்தாலும் பலருக்கு ஏற்றப்பட்டிருந்தது. இம்மருந்து ஏற்றும்போது அதிக வலியை ஏற்படுத்தும் என்பதால் கையில் போடுவதை தவிர்த்து பிட்டத் தசையில் (Gluteal Region) போடப்பட்டது. அதுவும் வலியை தந்தாலும் கையில் போடுவதை விட இது பரவாயில்லை என்ற நிலை இருந்தது. இவற்றைப் பாவித்தும் பாதிப்பில் இருந்து மீள முடியாத நோயாளிகளுக்கு சேலைன்களுடன் இணைந்து Quinine என்ற மருந்தும் ஏற்றப்பட்டது. அல்லது Quinine மாத்திரை வழங்கப்பட்டது.

இது கொரோனா விளம்பரம்

இம்மருந்து மூன்று கட்டங்களாக ஏற்றப்படும். தொடர்ந்து அந்த சேலைனுடன் இணைக்கப்பட்டிருந்த மருந்து ஏற்றப்படாது. குறித்தளவு இடைவெளி விடப்பட்டு மூன்று கட்டங்களாக அம்மருந்து ஏற்றப்படும். அதே நேரம் உடலில் நீரிழப்பை நிவர்த்தி செய்யக் கூடியதாக அதிகமாக நீர் அருந்த வேண்டும் என்றும் பணிக்கப்படும். அதிகமாக இளநீர் குடிக்கவும் அறிவுறுத்தப்படும். இவ்வாறு பல நூறு செயற்பாடுகளை இரவு, பகல் என்ற வித்தியாசமின்றி தமிழீழ மருத்துவர்கள் இலங்கை அரச மருத்துவர்கள் என்ற வித்தியாசமின்றி மக்களோடு மக்களாகவும், போராளிகளோடு போராளிகளாகவும் செய்து வென்றார்கள். ஒரு காலத்தில் மலேரியாவால் உயிரிழப்புக்களைக் கணக்கிட முடியாது திணறிய வன்னி மண்ணின் மருத்துவத் துறையினரின் அதீத திறனாலும், செயற்பாடுகளாலும் மலேரியா-0 என்ற நிலைக்கு வன்னியை உருவாக்கி இருந்தார்கள்.

சிங்கள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தடுக்கவோ, முறியடிக்கவோ முடியாது திணறிய / இன்றும் திணறிக் கொண்டிருக்கும் இந்த மலேரியா நோய், தமிழீழ அரசின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இல்லாது அழித்தொழித்து வெற்றி கண்டது மருத்துவத்துறை. இறுதி நோயாளி 2004 ஆம் ஆண்டு மாசிமாதம் வன்னியில் இறுதி நோயாளி இனங்காணப்பட்டார். அத்துடன் வன்னியில் மலேரியா – 0 என்ற நிலை உருவாக்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்தால் மலேரியாவை அழிக்க முடியாத பகுதிகள் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்த முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்கள் உள்ளடங்கிய தமிழீழ அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எம்மால் எதையும் செய்து முடிக்க முடியும் என்று உலகிற்கே சவால்விட்டு வெற்றி கண்டது எமது மருத்துவத்துறை. இது உலகிற்கே பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது என்றால் மிகையில்லை.

வன்னியில் மலேரியா-0 என்ற நிலைக்கு எம் மருத்துவத்துறை கடுமையான போராட்டங்களை கடக்க வேண்டி இருந்ததை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இவ்வாறு வன்னியில் “மலேரியா -0 நிலை 2008 பின்காலப்பகுதி வரை உறுதியாக இருந்தது. ஆனால் திடீர் என்று ஆழியவளைப்பகுதியில் மலேரியா நோய்த் தொற்று ஏற்பட்டதாக சில நோயாளிகள் இனங்காணப்பட்டார்கள். உடனடியாக, மருத்துவக் கலாநிதி திலீபன் அவர்களின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு இயக்கம் மற்றும் தமிழீழ சுகாதார சேவைகள் ஆகியவை இணைந்த மருத்துவ அணி ஆழியவளைப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு வந்து அயல் கிராமத்துக்கு கூட தொற்று ஏற்படாதவாறு மீண்டும் மலேரியாவை -0- நிலைக்கு கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த நிலையில் அம்மருத்துவ அணிக்கு உறுத்தலாக இருந்த விடயம் அப்பிரதேசத்துக்குள் புதியவர்கள் யாரோ உள்நுழைந்திருக்கின்றார்கள் என்பதே. இல்லையெனில் மலேரியாத்தொற்றுக்கான சந்தர்ப்பம் இல்லவே இல்லை என்று மருத்துவர்கள் உறுதியாக நம்பினார்கள். இது எவ்வாறு இங்கே ஏற்பட்டது? என்ற கேள்விக்கு விடை தெரியாது தேடினார்கள்.

தமிழீழ சுகாதார சேவை மருத்துவரால் தேசியத்தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. விடயம் கூறப்பட்ட ஓரிரு நாட்களில் அதற்கான பதில் தமிழீழ சுகாதார சேவை மருத்துவர்களுக்கு கிடைத்தது.

இலங்கையின் புலனாய்வு அணி சார்ந்தவர்கள் அப்பிரதேசத்தில் தங்கி இருந்து சென்றிருக்கிறார்கள் என தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு உறுதி செய்திருந்தது. அது மட்டும் அல்லாது பலரை கைதும் செய்தது. அந்த உழவாளிகளின் ஊடாக மீண்டும் ஏற்பட இருந்த மலேரியா அபாயத்தை ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள்ளையே வெட்டிப் புதைத்தனர் தமிழீழ மருத்துவத்துறையினர். அதனால் இறுதி நாள் வரை மலேரியா அற்ற வன்னியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள் தமிழீழ மருத்துவத்துறையினர்.

உலக அமைப்பே அறிக்கையிட்ட மலேரியா – 100 ஐ மலேரியா – 0 ஆக்கி வென்றனர் எம் மருத்துவர்கள்.

————————————————————————

குறிப்பு: இந்த நடவடிக்கையில் பல மருத்துவர்களும், பல நூறு மருத்துவப் பணியாளர்களும் பங்கெடுத்திருந்தார்கள். அத்தனை பேரையும் வரிசைப்படுத்துவதென்பது கடினமானது. அத்தோடு அவர்களின் தொடர்புகள் இல்லாத நிலையில் அவர்களின் பெயர்களை பாவிப்பதற்கு அவர்களிடமிருந்து அனுமதி எடுக்க முடியாத காரணத்தாலும் பெயர்களை பாவிக்க முடியவில்லை.

நன்றி

————————————————————————