பெண்… கடவுளர்களுக்கு இணையாக உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டிய ஒரு உன்னதம். ஆனால் எமது சமூக கட்டமைப்பு பெண்ணை ஓர் அடிமையாகவும் ஆணின் கட்டளைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றும் இயந்திரமாகவே வைத்திருக்கிறது. அவர்களை ஆணுக்கு நிகரானவளாகவும் ஏற்க மறுத்து சமத்துவமற்ற ஓர் ஏற்றத்தாழ்வு மனநிலையிலையே வைத்திருப்பது நியமானது. பெண் என்பவள் ஆற்றல் இல்லாதவள் பிள்ளைப்பேற்றுக்கும் சமையல் கலைக்கும் மட்டுமே உரித்தானவள் என்ற ஒரு மனநிலை எமது சமூகத்தில் வேரூன்றி போய் கிடப்பதை நாம் மறுக்க முடியாது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொண்டு வராமல், அவளது உள்ள கிடைக்கைகளை புதைத்திருக்கின்றன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவித்து பெண்ணை கீழ்நிலை சடமாக ஆக்கி சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

அழகி என்பதால் சீதையை இராவணன் ஆசைப்படுவதும், அதனால் இராமன் போர் தொடுத்து செல்வதும் சண்டை முடித்து வந்த பின் அதே இராமன் தனது மனைவியை சந்தேகத்தோடு தீ மிதிக்க வைத்ததும், மகாபாரதத்தில் சக்கரவர்த்தினியாகிய பாஞ்சாலியை ஐவர் மணப்பதும், துரியோதனன் துகில் உரிவதும் என்று எந்த இதிகாச கதைகளை எடுத்துப் பார்த்தாலும் பெண் என்பவள் கவர்ச்சி பொருளாக்கப்பட்டே இருந்தாள்.

ஆனாலும் வன்னி வளநாட்டார் பாடலில் ஆனையை அடக்கிய அரியாததை என்ற பாடல் மூலம் தமிழ் பெண்ணின் வீரமும் புலப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் போலவே கற்புக்காக மதுரையையே எரித்த கண்ணகியும், நான் கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா என முனிவரையே கேள்வி கேட்ட பெண்ணையும் இதிகாசங்களின் ஓரிரண்டு இடங்கள் பெருமை பேசினாலும் ஆணுக்கு நிகரானவளாக எங்கும் குறுப்பிட்டதில்லை.

எமது சமூக கட்டமைப்புக்கள் அனைத்தும் பெண்ணை அடிமையின் ஒரு சின்னமாகவே வெளிக்காட்ட விரும்பின. அவள் ஆணின் பணியாளியாகவும் ஆணுக்கு சேவை செய்யும் ஒரு சேவகியாகவுமே மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது எமது சமுதாய கட்டமைப்பு ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி கொள்வதும். பெண் பிறந்துவிட்டால் கவலை கொள்வதும் என கொடுமையான கலாச்சார விழுமியங்களை எம் சமூகக் கட்டமைப்புக்கள் உருவாக்கி இருக்கின்றன.

இந்தியாவின் சில கிராமங்களில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தையை சாகடிப்பதும் கூட தடுக்க முடியாத வரலாறாக தொடர்கிறது. மேற்குலக நாடுகளில் பெண்ணுரிமைகள் இப்போது மதிக்கப்படுவது ஏற்றுகொள்ளபட வேண்டிய ஒன்றாகும். அதனால் தான் விண்ணிலே ஏறி ஆய்வு செய்யும் அளவுக்கு கல்பனா போன்ற பெண் விஞ்ஞானிகள் உருவாக்கம் கண்டுள்ளார்கள். ஆனாலும் இப்போதும் பல நாடுகளில் அதாவது எகிப்து. ஈரான், ஈராக், சவுதி, பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் பெண்ணடிமை தனம் உச்சத்தில் இருப்பதை மறுக்க முடியாது.


கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் நடந்த நிகழ்வு ஒன்று இதற்கு உதரானமாகிறது. தலித் இனத்தில் பிறந்த குற்றம் ஒன்றுக்காக பெண்கள் நடு வீதியில் பல நூறு ஆண்கள் குழுமி நின்ற நேரத்திலும் காவல்துறையால் உடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டமையானது இன்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லாத நிலையை எடுத்துரைக்கிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை பெண்களை இழிநிலைக்கு இட்டுச் சென்றது.


பொள்ளாச்சியில் நடந்த வன்பனர்வு எத்தகைய கொடுமையானது. இதை உலகமே பார்த்துக்கொண்டிருந்தும் குற்றவாளிகள் என்ன ஆனார்கள்? சுதந்திரமாக உலவுகின்றனர்.

ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்த வினாவுக்கான விடையை எங்கள் தேசத்தில் எங்கள் பெண்கள் தந்து நின்றனர்.

எமது தமிழீழ சனத்தொகையில் சரிபாதியை விட அதிகமானவர்கள் பெண்கள். இப்படியான எண்ணிக்கையுள்ள பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். இந்த அடிப்படையே உலகத்தையே எம்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த மகளிர் படையணிகளின் உருவாக்கத்துக்கு காரணமாகின.

அவர்களாலும் ஆணுக்கு சரி நிகராக அத்தனை சாதனைகளையும் செய்ய முடியும். ஆண் போராளிகளின் படையணிகள் என்ன என்ன களங்களில் செய்தார்களோ அத்தனையையும் பெண் போராளிகளும் செய்து காட்டினார்கள். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. ஆனாலும் எங்கள் பெண் போராளிகள் புரிந்த சாதனை பட்டியல்கள் நீண்டு கொண்டே போனது. ஆரம்பத்தில் பெண் போராளிகளை எள்ளிநகையாடிய தமிழீழ மக்கள் பின்நாட்களில் அவர்களோடு ஒரு வார்த்தை பேசிட மாட்டோமா என ஏங்கிய காலத்தை பெண்போராளிகள் உருவாக்கினார்கள்.

சாதி, மத, ஆண், பெண் வேறுபாடுகள் மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருக்கும் எமது சமூகத்தில் இருந்து விழித்தெழுந்தனர் எமது யுவதிகள். கடலில், காட்டில், தரையில், அரசியலில், சண்டையில், தொழில்நுட்பத்தில் , வேவில், புலனாய்வில், தொலைத்தொடர்பில், என்று எதை எல்லாம் சாதிக்க முடியுமோ அதை எல்லாம் சாதித்து வீர காவியமாகினர்.

இதற்கு வழிகாட்டிய உன்னதம் எம் மாலதி என்னும் சகாயசீலி. தனது வீரச்சாவின் மூலம் பெண் போராளிகளின் சண்டைத் திறனுக்கு புது வரலாற்றுப் பக்கம் ஒன்றை கோப்பாய் மண்ணில் வைத்து ஆரம்பித்து வைத்தாள். அவளின் விழுதுகளாக தோன்றிய ஒவ்வொரு பெண் போராளிகளும் எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நின்றார்கள்.

“பிரபாகரன் பெண்களை வளர்கிறாரா பேய்களை வளர்க்கிறாரா “ என்று தன் பொறுப்பதிகாரிக்கு தொலைத் தொடர்பில் தெரியப்படுத்திய சிங்கள சிப்பாய்க்குத் தான் தெரியும், இதயபூமியில் ஆயுதங்களின் ரவைகள் முடிந்துவிட்ட பின் கத்திகளாலும் கை கால்களாலும் எதிரியோடு அடிபட்டு இறுதிவரை உயிரோடு பிடிபடாது வீரகாவியமாகிய பெண் சிறுத்தைப்படையணிப் போராளிகளின் வீரமும் உறுதியான உடற்பலமும்.

மேற்கத்தைய தேசத்தில் பெண் உரிமைக்காக போராடியவர்கள் இப்போது சுதந்திரமடைந்து இருப்பதை போன்று எமது தாயகத்திலும் பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. பெண் புலிகள் வாழ்ந்த காலத்தில் வன்புணர்வுகள் நடந்தன இல்லை என்று கூற முடியாது. ஆனால் அவற்றை எதிரிகளும் துரோகிகளும் நடாத்தினர். அதுவும் புலிகளின் இருப்பு இல்லாத இடங்களில்.

தாயகத்தில் அண்மைக்காலங்களாக எழுந்து நிற்கும் வன்புணர்வு சம்பவங்கள் அனைத்தும் எமக்குள்ளே இருக்கும் எம்மவர்களாலையே நடந்தேறுவது எவ்வளவு கொடுமையானது.

“இன்றைய காலத்தில் பெண்புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலை இருப்பதால் தான் பெண்களுக்கு இப்படியான நிலை உருவாகிறது “ என்று நாடாளு மன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களே கூறும் அளவில் எமது பெண்களின் நிலை மீண்டும் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. இன்று பதவியில் இருப்பவர்களுக்கு சரி, சாதாரண பெண்களுக்குச் சரி பாதுகாப்பு அறவே இல்லை. ஆனால் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் அன்று தலை நிமிர்ந்து நின்றனர். பாதுகாப்பு என்பது பெண் போராளிகளின் ஆளுகைக்குள் இருந்தவர்களுக்குத் தெரியும் எப்படி இருந்தது என்று. இன்று மீண்டும் மண்ணுக்குள் முடக்கப்பட்டு கிடக்கிறார்கள் எங்கள் பெண்கள்.

தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நின்றனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வந்தார்கள். இவை எல்லாவற்றையும் உடைத்தெறிந்து எமது தமிழீழ பெண்கள் சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருந்தார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிட கூடிய அளவுக்கு அவர்கள் முதிர்ச்சி பெற்றிருந்தார்கள்.

ஆனால் இன்று அப்படியான நிலை இல்லை
மீண்டும் எமது இனம் அடிமைக்குள் உட்புகுந்து ஆணாதிக்க வாதிகளால் அடக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. .எங்கள் தேசத்து பெண்ணினமே நீ எழ வேண்டிய நேரம் இது. உனது உரிமைக்காக போராடிய பெண் போராளிகள் மௌனித்து இருந்தாலும் உன்னாலும் முடியும் என்று எழுந்து நில் உன் வரலாற்றை நீயே படைப்பாய். மாலதி காட்டிய வழியது பற்றி நடந்து செல் நீ இலக்கடைந்து சுந்தந்திர பறவைகளாக வானில் பறப்பாய்