திறமையான மென்பொருள் மேம்பாட்டாளர். வன்னிப்பகுதியில் இருந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் சிலவற்றில் அரசன் அண்ணாவின் பங்கு இருக்கும். எங்கள் கல்லூரியில் எமக்கு முந்தைய கல்வியாண்டில் கற்று முடித்த தகவல் தொழில்நுட்பவியல் மாணவன். தகவல் தொழில்நுட்ப அறிவியலை தன் பணிக்காக திறமையாக பயன்படுத்தியவன். அப்பா அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக சகோதரிகளுக்கு செல்ல அண்ணனாக என் சொந்தப் பெயரை தனது சொந்தப்பெயராக் கொண்ட அன்புச் சகோதரன்.


அரசன் அண்ணாவின் தங்கை எனது வகுப்புத் தோழி என்பதை விட நல்ல நட்புறவுள்ள தங்கை. அதனால் அரசன் அண்ணாவும் எமக்கு சகோதரனாகி விட்டார். தங்கை பேசும் போதெல்லாம் “உங்களோட பேசும் ஒவ்வொரு தருணமும் என்ட அண்ணாவோட பேசுற மாதிரி தோன்றுதண்ணா. அண்ணா இருந்திருந்தா இப்ப எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லையண்ணா. அவர் வரவேணும் என்று ஆசையாக இருக்கு. வேளைக்கு வந்து சேரவேணும் இது மட்டும் தான் அண்ணா எனக்கு இப்ப இருக்கிற ஆசை” என்று கூறும் அவளிடம் நான் மட்டுமல்ல உன் கூடப்பறவாத அண்ணன்கள் உங்களோடு இருக்கின்றோம் கவலைப்படாதே என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.


அரசன் அண்ணாவை நான் 14-15 ( சரியாக நினைவில்லை) உண்டியல்சந்திக்கு அருகாமையில் கண்ட போது மனதுக்கு உள்ளே என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அம்மா அப்பாவைக் கூட்டிக் கொண்டு உள்ள போறத பற்றி யோசி தம்பி என்று கூறிவிட்டு நகர்ந்த அவரிடம் அவரின் தங்கை பற்றி கேட்ட போது அவள் காயப்பட்டதாகவும் மருத்துவக் கப்பலில் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறினார். அதுவரை கண் கலங்கி கண்டிராத அரசன் அண்ணாவை அன்று கொஞ்சம் கலக்கத்துடனே நான் பார்த்தேன்.


இருவரும் பிரிந்து சென்றுவிட்டோம். சில ஆண்டுகள் கழிந்து இனவழிப்பு ஆதாரங்கள் புகைப்படங்களாகவும் ஒளிப்படங்களாகவும் வெளிவந்த போது அரசன் அண்ணாவின் முகத்தை ஒரு புகைப்படத்தில் நான் கண்டேன். சிங்கள ஆதிக்கப்படைகளால் கைது செய்யப்பட்டு நீர்நிலை உள்ள கிடங்கு ஒன்றில் இருத்தி வைக்கப்பட்டிருந்த பலருக்குள் தரையில் படுத்த நிலையில் அவரை நான் கண்டேன். பழகியவர்களுக்குத் தெரியும் அப்புகைப்படத்தை பார்த்தவுடன் எவ்வாறான மனநிலை எமக்குள் உருவாகி இருக்கும் என்று. அவர்களைப் போலவே நானும்.


எங்கள் அண்ணாவை கைது செய்து வைத்திருந்த இலங்கை வல்லாதிக்க அரசே கூறு…?
உன்னால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட எங்கள் சகோதரன் எங்கே?
எம் மண்ணில் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியில் தன் பங்கை தந்த எம் தகவல் தொழில்நுட்பவியலாளன் எங்கே?
தங்கைகளுக்கு அண்ணனையும் உடன்பிறவாத எங்களுக்கு சகோதரனையும் எங்கே என்று கூறிவிடு…
சர்வதேசமே நீயாவது இந்த இனவழிப்பு அரசின் கொடுமைகளில் இருந்த தமிழீழத் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தந்து எம் உறவுகள் எங்கே என்று கேட்டுச் சொல்லு.

12 ஆண்டுகள் கடந்து போக போகிறது. எங்கள் நெஞ்சமோ விம்மி இன்னும் அழுகிறது.

நீதி கூறு சர்வதேசமே…!
தேடலுடன் இ.இ.கவிமகன்
04.05.2021