என் நேசத்துக்குரிய எனது ஆசான் திரு சாந்தகுமார் இப்போது எங்கே? வினாவுக்கு விடை இல்லை ஆனால் அவர் நினைவுகளுக்கு அணையில்லை.
கண்ணாடி போட்ட முகம். கறுத்த மெல்லிய தேகம். உயர்ந்து நிமிர்ந்த நடை. உறுதியான பேச்சு இடது கையின் நடு விரல்கள் இரண்டும் ஏதோ ஒரு காரணத்தால் காணாமல் போய்விட்ட வலியிலும் உறுதி குறையாத நிமிர்வு. விழிகளுக்கு பார்வைக் கண்ணாடி. இந்த மனிதனை அறியாத மல்லாவி மக்கள் இருக்க முடியாது.
யாழ் மாவட்டத்தின் நெய்தல் நிலமான வடமாட்சி கிழக்கின் மருதங்கேணி அவரது வாழ்விடம். அப்போது ஒரு பெண் குழந்தை பின்பு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததால் மொத்தம் 3 குழந்தைகளுக்கு அப்பா. அன்பான மனைவி அவரது குடும்பமும், மனைவியின் குடும்பமும் ஈழ தேசத்துக்கா கொடுத்த விலைகள் கொஞ்சமல்ல. தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தில் வீறாக கொண்டவர். நெருப்பாற்று நீச்சலில் தன் கனவுகளை மிதக்கவிட்டவர். அவ்வாறான எம் ஆசானைத் தான் தொலைத்து விட்டோம் நாங்கள்.
1996 ஆம் வருடம் யாழ்ப்பாணத்தில் இருந்து மல்லாவிக்கு இடம்பெயர்ந்து, யோகபுரம் மகா வித்தியாலயத்தில் கல்விக்காக இணைந்ததில் இருந்து 2009.05.20 ஆம் திகதி வரை எங்கே இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு எங்கள் அன்பு உறவை பேணிய என் ஆசான் எங்கே?
பள்ளிக் கூடத்தில் மற்ற ஆசிரியர்களின் அடிக்கு பயமோ இல்லையோ சாந்தகுமார் என்ற இந்த அன்பாளனின் பேச்சுக்கும் அடிக்கும் நாங்கள் பயப்பிடாத நாட்கள் இல்லை. ஆனாலும் ஒரு ஆசிரியன் என்ற நிலையைத் தாண்டி என்னோடு இறுதி வரை நல்ல அண்ணனாக, நல்ல நண்பனாக, நல்ல வழிகாட்டியாக இருந்தவர். அவர் மட்டுமல்ல அவரது மனைவி பிள்ளைகளும் நல்ல அன்பையும் பாசத்தையும் இன்று வரை காட்டி வருவது என் மனதுக்கு நிறைவே.
பள்ளியின் ஒழுக்கத்துறைக்கு பொறுப்பாக இருந்தவராதலால் கடுமையான கண்டிப்புள்ள ஆசானாக இருந்தார்.
உளி விழுகையில் வலி என நினைக்கும் எப்பாறையும் சிலையாவதில்லை” என்பதைப் போல அவரின் கண்டிப்பான செயற்பாடுகளை வலியென நினைத்திருந்தால் நாம் உயர்ந்திருக்கவே முடியாது. அவர் எம்மைக் கண்டிக்கவில்லை எம்மை சரியாக வழிநடாத்தினார் என்றே சொல்வேன். அவருடன் வாழ்ந்த பள்ளிக்காலங்களின் இனிய நாட்கள் மறந்து போக முடியாதவை. அவற்றை இப்போது வார்த்தைகளுக்குள் அடக்கி விடவும் முடியாது.
பள்ளிக் கல்வியை நான் முடித்து வெளியேறி இருந்தாலும் அவரின் வீட்டோடு இருந்த நெருக்கம் இன்றுவரை நல்லுறவாகவே என்னை வைத்துள்ளது.
முள்ளிவாய்க்காலில் எமது மண்ணின் விடுதலைக்கான பயணம் வல்லாதிக்க சக்திகளால் அழித்தொழிக்ப்பட்ட பின்பான இந்த நாட்களில் ஒரு கொடிய நாளில் தான் எங்கள் ஆசானை நான் இறுதியாக கண்டேன். மெலிந்து உருவம் மாறிப் போயிருந்தவர் என்னைக் கண்டதும் தன்னருகே வருமாறு அழைத்தார். அன்று அவர் தன் அருகில் அமர்த்தி வைத்து கதைத்தவற்றை மறக்க முடியவில்லை. எனது தந்தை பற்றி விசாரித்தவர் அப்பாவும் அம்மாவும் இருந்த இடத்துக்கு வந்து அப்பாவிடமும் கதைத்துக் கொண்டிருந்தார்.
.2009. வைகாசித் திங்களின் 18 ஆம் நாள், வட்டுவாகல் பாலம் கடந்து, அடிமை நாய்களாக சிங்களப் படைகளிடம் போய் சேர்ந்த பின்பு, முல்லைத்தீவுப் பகுதியில் வைத்து நான் அவரைச் சந்தித்தேன். அதாவது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வைத்து அவரைச் சந்தித்தேன். அது தான் என் இறுதிச் சந்திப்பு. எதற்கும் அஞ்சாத மனிதன். எப்போதும் நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையையும் கொண்ட மனிதன், அன்று சோர்ந்து போய் அடையாளம் காண இயலாத நிலையில் தன் அடையாளத்தைத் தொலைத்து விட்டே கதைத்துக் கொண்டிருந்தார்.
யாருக்கு என்ன நடக்கும்? எவரை யார் வந்து கைது செய்வான் என்பதை யாருமே அறியாத பொல்லாத பொழுதுகளைக் கொண்டது அன்றைய நாள். அனைத்தையும் இழந்து தெருநாய்களாய் வெட்டைவெளியில் நாங்கள் வானத்தைப் பார்த்தபடி கிடந்த கொடுமையான நாள். அதனால் அவர் எனக்கும் நான் அவருக்கும் சில வார்த்தைகளால் ஆற்றுகைப்படுத்த முயன்றோமே தவிர, நாங்கள் யாருமே எதையும் செய்ய முடியாத சூழலில் இருப்பதை தெளிவாக உணர்ந்திருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக பலவற்றை பேசினோம்.
அதன் பின் அவர் எம்மை விட்டுப் பிரிந்து போகப் போவதாக கூறினார். அப்போது என் தந்தையும் நானும் பேசாமல் இருங்கோ நாங்கள் எல்லாரும் சேர்ந்து போவம் என்று அவரிடம் வினவிய போது,
“இல்ல நாங்கள் 10 பேருக்கு மேல சேர்ந்து தான் வந்தனாங்கள் எல்லாரும் ஒன்றாக தான் போக போறம் Father ஓட போற ஆக்களோட சேர்ந்து போனால் கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும் என்று நினைக்கிறன் “
என்று கூறிவிட்டு திரும்பிப் பார்த்தபடி போன என் ஆசானை நான் எங்கே தேட?
எங்கும் இல்லை.
பிள்ளைகளும் மனைவியும் தேடாத இடமோ இல்லை
சனாதிபதி ஆணைக்குழு என்றும் சர்வதேச நிறுவனங்கள் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தேடுதல் பணிகளைச் செய்யும் அத்தனை இடங்களிலும் பணியாற்றும் மனிதம் கொண்டவர்களிடம் கெஞ்சி மன்றாடி கேட்டுவிட்டார்கள். ஆனால் எங்கேயும் எங்கள் ஆசானைக் காணவே இல்லை.
பள்ளியில் நல்லாசானாகவும், நல்ல வழிகாட்டியாகவும் வாழ்ந்த எங்களின் உயிரோனை சிங்கள நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் ஏறி இருக்கும் சிகப்புத் துண்டை தோழில் போட்ட சிங்க வம்சத்தின் கொள்ளுப்பேரன்களின் கொலை வெறியாட்டத்தில் எங்கே கொண்டுபோய் தொலைத்துவிட்டோம் என்று தெரியாது தவிக்கும் இந்த நாளிகையில் கடந்து போன 12 ஆண்டுகளாக எம் ஆசான் வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் நாட்கள் இன்னும் முடியவில்லை.
இன்று 12 வருடங்கள் கடந்த நிலையில் எனது ஆசான் திரு. சாந்தகுமார் எங்கே என்று தேடித் தேடி காத்திருக்கும் அவரது உறவுகளோடு நானும் கேட்கின்றேன். இறுதி நாள்வரை எம் தேசத்துக்காகவும் எம் தேசப்பிள்ளைகளின் கல்விக்காகவும் உழைத்த எங்களின் காவலன் எங்கே?
இதற்கு பதில் கூறுமா இந்த சிங்கள அரசு?
இதை தட்டிக் கேட்டு விடை தருமா ஐ.நா என்கின்ற அமைப்பு?
இவ்வாறான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு துணை போன சர்வதேச நாடுகள் இப்போதாவது கொஞ்சம் விழி திறந்து எம்மைப் பார்க்குமா?
தேடலுடன் இ.இ.கவிமகன்
02.05.2021