எங்கே எங்கள் நண்பி? எங்கே எங்கள் தங்கை? எங்கே எங்களின் அன்பான ரமணி என்று இப்போதும் தேடிக் கொண்டே இருக்கின்றோம். எங்கள் கல்லூரியில் இருந்த அனைவரிலும் சிறிய உருவத்தையும் புன்னகை மாறாத வதனத்தையும் கொண்டவள். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அவள் கற்பிக்கும் ஆசான்களுக்கும் கூட கற்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தவளாக இருந்தாள்.


தொழில்நுட்பக் கல்லூரி அனைவரையும் முதல் நாள் வரவேற்றுக்கொண்ட போதே எல்லோரும் நண்பர்கள் என்ற வட்டத்துக்குள் நாம் இணைந்து கொண்ட போது எம் ரமணியும் எம்மோடு இணைந்து கொண்டாள். நானும் ரமணியும் ஒரே நாளில் தான் பிறந்திருந்தோம் ஆனாலும் ஆண்டில் என்னை விட இளையவள். அண்ணா என்று அன்பாக அழைக்கும் அவளோடு இணைந்த கல்லூரி வாழ்க்கையில், படிப்பு ஒரு பக்கம் நட்பு மறுபக்கம் என்று சந்தோசம் மிக்க தருணங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.


கற்றலுக்காக பல மென்பொருள் கட்டமைப்புக்களை உருவாக்கிய எமது மாணவ அணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலாண்டுக்கும் வேறு வேறு அணிகளோடு பணியாற்றிய போது வேறு அணிகளில் பயிற்சிச்செயற்றிட்டங்களை செய்து கொண்டிருந்தாள் ரமணி. ஆனால் இறுதி செயற்றிட்டத்துக்காக ( Project) அணிகள் பிரிக்கப்பட்ட போது நான் ரமணி மற்றும் இன்னும் ஒரு நண்பி என ஓரணியில் இணைந்தோம்.
அதுவரை இருந்த நட்பை விட இன்னும் நெருக்கமான நட்பு உருவாகியது. நான் செயற்றிட்டத்தின் வேலைகள் பிரிக்கப்பட்ட போது செயற்றிட்டத்தை வாடிக்கையாளரிடம் இருந்து பெறுவது முதல் அவர்களுடனான தொடர்புகள் மற்றும் வடிவமைப்பு வேலைகளையும் செயற்றிட்ட விளக்கவுரைகள் மற்றும் விளக்க காட்சிகளை ( Presentation ) உருவாக்குதல் என பணிகளை எடுத்த போது அங்கே இயங்கிய காணி தொடர்பான பயன்பாட்டு மென்பொருளை முழுமையாக மேம்படுத்தும் வேலைகளை தோழிகள் செய்தார்கள். அதை சிறப்பாக செய்து பயன்பாட்டுக்காக வாடிக்கையாளருக்கு கொடுத்திருந்தார்கள்.


கற்றல் முடித்து நான் எமது கல்லூரியிலையே பணிக்காக நின்றுவிட அவள் கிளிநொச்சியில் இயங்கிய மென்பொருள் தயாரிப்பகம் (Software Tech )ஒன்றில் தொழில்நுட்ப பணியாளராக இணைந்து கொண்டாள்.
வன்னியை தின்று விட துடித்து படை நடாத்திய சிங்களத்தின் வல்லாதிக்கப்படையின் தாக்குதல்கள் எம்மை ஏதிலிகளாக்கி கொஞ்சம் கொஞ்சமாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் முடக்கிவிட்ட பின் அவளை நான் கண்டதில்லை. ஆனால் அவள் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அதாவது மக்கள் எல்லோரும் வட்டுவாகல் வழியாக சிங்களப்படைகளிடம் ஏதிலிகளாக சரண்டைந்த போது உயிருடன் முள்ளிவாய்க்காலில் நின்றதுக்கான சான்றுகள் இன்றும் உயிருடன் உள்ளன. ஆனால் இப்போது அவள் எங்கே என்று தெரியவில்லை. அவளது இருப்பு என்னவென்று புரியவும் இல்லை. ஒரு நல்ல மாணவியாக, நல்ல நண்பியாக, நல்ல சகோதரியாக இருந்து எம்மோடு நட்போடு வாழ்ந்த எம் ரமணி எங்கே?
விடை சொல்லுமா சிங்கள தேசம்?
விடை தருமா இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் சிவப்புத் துண்டை தோழில் போட்டுத் திரியும் ராசபக்சவின் குடும்பம்.
விடை தருமா சர்வதேசம்
தேடலுடன் இ.இ.கவிமகன்
03.05.2021