17.05.2009 உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, முள்ளிவாய்க்கால் மண்ணில் உச்சகட்டக் கோரத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது சர்வதேச நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்த இலங்கையின் சிங்களப் பேரினவாதம். அங்கே எதுவும் மிஞ்சவில்லை. தமிழன் என்ற இனம் வாழ்ந்ததுக்கான எச்சம் கொஞ்சம் கூட இருக்கக் கூடாது என்று நினைத்து உச்சகட்டத் தாக்குதல்களை மேற் கொண்டு வந்த சிங்களப்படைகளை போராளிகள் எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்த பொழுதிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி குறித்த 2-3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதிக்குள் சுருங்கிக் கிடந்தது.
மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களைச் செய்து அவர்களை அழித்தொழித்துக் கொண்டிருந்த சிங்கள தேசத்திடமே நாங்கள் அடிமைகளாக வந்து சேர வேண்டிய சூழல் உருவாகியது. அப்போது,

 • சித்திரவதை அனுபவிச்சாலும் பரவாயில்லை இந்த குண்டுமழைக்குள் இருந்து உயிர் தப்பினால் போதும் என்று நினைத்தார்கள் மக்கள் பலர்
 • எதிரிக்காக போடப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் எல்லை வேலியை தாண்டி சிங்கள தேசத்திடம் போய் சேர்ந்தனர் சில நூறு மக்கள்.
 • எங்களைக் காப்பத்த யாருமே இல்லையா என்று ஓலமிட்டபடி செத்துப் போயினர் பல ஆயிரம் பேர்.
 • செத்தாலும் பரவாயில்லை ஆமியட்ட உயிரோட பிடிபட்டு சித்திரவதை அனுபவிக்க முடியாது என்ற நிலையில் குண்டு மழைக்குள்ளே வாழ்ந்தனர் சில பேர்.
 • இறுதி நாள் வரை இயக்கம் என்ன முடிவெடுக்கின்றதோ அதையே நாம் செய்வோம் என்ற நினைவோடு வாழ்ந்த மக்கள் பல ஆயிரம் பேர்.
 • இறுதிவரை எதிரியோடு போராடி வீரச்சாவடைந்த போராளிகள் பல ஆயிரம் பேர்.
  என மரண ஓலத்துக்குள் வாழ்ந்த எம் மக்களுக்குள் தான் அந்தக் குடும்பமும் இயக்கம் என்ன சொல்லப்போகுது? தலைவரிடம் இருந்து என்ன நிலைப்பாடு வரப்போகுது என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது. கணவன் மனைவி இருவரும் போராளிகள் என்றாலும் அவர்களுக்கு உறவாக இருந்த பச்சிளம் பாலகனை எப்படியாவது உயிரோடு காப்பாற்றிவிடத் துடித்தார்கள் அந்தப் பெற்றவர்களான போராளிகள்.
  எல்லாம் கைமீறிப் போய்விட்டது என்ற நிலை வந்த போதும் நினைவெல்லாம் தமிழீழத்தை சுமந்த அவர் மகனோடும் மனைவியோடும் சில உறவுகளோடும் கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த போது இராணுவம் திடீர் என்று அப்பகுதியை வன்வளைத்து தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போது இராணுவத்தால் கைது செய்யப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறார் தமிழீழ விடுதலைப்புலிகளின் கல்விப்பகுதிப் பொறுப்பாளராகவும் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளராகவும் இருந்த கலைக்கோன் மாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற போராளி.
  அங்கிருந்து உடனடியாக அவர்களை அழைத்து சென்ற சிங்களப்படை இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்த ஒரு இடத்துக்கு கொண்டு செல்கின்றது. அங்கே அனைவரையும் ஒரு சேர அமர்த்தி வைத்தபடி, இதில
  “LTT ல இருந்தவர்கள் எழும்பி வாங்கோ”
  என்று அழைத்தார்கள். அங்கே இருந்த எல்லோரையும் புலியாகவே பார்வையாலும் துப்பாக்கி முனையாலும் மிரட்டினார்கள்.
  தம்மால் தமது குடும்பத்துக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் அங்கே இருந்த போராளிகளுக்குத் தோன்றாமல் இல்லை. கண்கள் இரண்டும் பார்வை சீரற்ற நிலையிலும் இன்னொருவரின் உதவியற்று தொடர்ந்து தன்னால் இயங்குவது கடினம் என்று தெரிந்தும், தன் மகனுக்கும் மனைவிக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவரது மனைவி எவ்வளவோ தடுப்பதையும் பொருட்படுத்தாது எழுந்து கொள்கிறார். இவரோடு தமிழீழ மாணவரமைப்புப் பொறுப்பாளராக இருந்த கண்ணன் என்ற போராளியும் எழுந்து கொள்கின்றார்.
  இருவரையும் கைது செய்த இராணுவத்தினர் அவர்களை பதிவு செய்துவிட்டு உங்களோடு அனுப்புவதாக தெரிவிக்கின்றனர். ஆனாலும் அந்த இடத்தில் பதிவு செய்வதற்கு ஏற்ற எந்த ஏற்பாடுகளும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் பதிவு செய்வதற்காக என்று அழைத்து செல்கின்றார்கள். அழைத்துச்சென்ற பின் அவரின் மனைவியையும் பிள்ளையையும் மற்றவர்களுடன் சேர்த்து ஆனந்தபுரம் பகுதிக்கு கொண்டு சென்று அங்கே வைத்து உடல் உடமை சோதனைகள் செய்யப்பட்டு பேருந்தின் மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அதே நேரம் கைது செய்யப்பட்ட கலைக்கோன் மாஸ்டர் மற்றும் கண்ணன் ஆகிய போராளிகளை என்ன செய்தார்கள் என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால் ஆனந்தபுரம் பகுதியில் வைத்து சோதனையிட்ட இடத்துக்கு அருகில் அவர்களை வைத்திருந்ததைக் கண்ட சாட்சியங்கள் இன்றும் உயிரோடு இருக்கின்றார்கள்.
  அந்த இடத்தில் உணவு வழங்கப்பட்டதாகவும் அவ்வுணவை உண்ட பின் கண்ணன் அண்ண தண்ணீர் கொடுக்க கலைக்கோன் மாஸ்டர் கை கழுவி விட்டு அந்த நீரை பருகியதாகவும் கண்டவர்கள் மனைவியிடம் கூறி இருக்கின்றார்கள். அதன் பின்பாக வவுனியாவின் ஓமந்தைப் பகுதிக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கே தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை விட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களைத் தாம் கண்டதாகவும் அரசியல்துறையில் பணியாற்றிய போராளி ஒருவர் அவரது மனைவியிடம் கூறி இருக்கின்றார். அதன் பின் எங்கே அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதற்கு எந்த சாட்சியங்களோ தடயங்களோ இல்லை.
  முள்ளிவாய்க்காலில் நடந்த இக் கைதுக்கு பின் வவுனியா வரை கொண்டு வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்தவர்கள் எங்கே? இதில் வெளிப்படையான விடயம் ஒன்று புலனாகின்றது. அதாவது கைது செய்யப்பட்ட கலைக்கோன் மாஸ்டர் வவுனியா வரை கொண்டுவரப்பட்ட பின்பே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார். இதுவே நியம்.
  இன்று 12 வருடங்கள் கடந்த நிலையில் கலைக்கோன் மாஸ்டர் எங்கே என்று தேடித் தேடி காத்திருக்கும் அவரது உறவுகளோடு நானும் கேட்கின்றேன். இறுதி நாள்வரை எம் தேசத்துக்காக உழைத்த எங்களின் காவலன் எங்கே?
  இதற்கு பதில் கூறுமா இந்த சிங்கள அரசு?
  இதை தட்டிக் கேட்டு விடை தருமா ஐ.நா என்கின்ற அமைப்பு?
  இவ்வாறான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு துணை போன சர்வதேச நாடுகள் இப்போதாவது கொஞ்சம் விழி திறந்து எம்மைப் பார்க்குமா?
  தேடலுடன் இ.இ. கவிமகன்.
  01.05.2021