13 வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.

2 ஆவது முறையாகவும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று இலங்கை வரவுள்ளார். அவரது விஜயத்தின் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும் மதியம் 2 மணியளவில் கலந்துரையாடலில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பேசப்படவுள்ள விடயம் குறித்து கருத்து தெரிவித்த அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.

எனினும், 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்த சுமந்திரன் 13 வது திருத்தத்தை அறிமுகப்படுத்திய இந்திய-இலங்கை ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்கும் பொறுப்பு, தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியாவிற்கும் உள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை ஒரு புதிய அரசியலமைப்பைப் குறித்து பேசப்பட்டாலும் அதுவும் தற்போது இழுபறிநிலையில் இருப்பதால் இந்தவிடயம் தொடர்பாகவும் நாம் இந்திய பிரதருடன் கலந்துரையாடுவோம் என்றும் சுமந்திரன் கூறினார்.