சாவின் நாற்றமும் அவல ஓலமும் எம் தாயகத்தை சூழ்ந்திருப்பது இன்னும் முடிந்த பாடில்லை. வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியும், மழையும் வெள்ளமும், நோயின் தாக்கமும் இப்படியாக இன்னும் எம் சாவுகளின் கணக்கெடுப்பு ஓய்ந்து போகவில்லை. இந்த நிலையில் தான் மீண்டும் ஒரு நாள் எம்மை விட்டு கடந்து செல்ல தயாராக இருக்கிறது. “சுனாமி” இப் பெயரை நாங்கள் முன்பு அறிந்ததில்லை. அதன் அர்த்தத்தை எமக்கு உரைத்துச் சென்ற பேரலைகள் எம் தாயகத்தை முத்தமிட்டு இன்றோடு. 14 ஆண்டுகள் நிறைவாகின்றது. இந்த நிலையில் மீண்டும் பேரலையாக வந்திருக்கும் செய்தி “ தாயகத்தின் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் வெள்ளமாக சூழ்ந்து கோரத்தாண்டவமாடுகிறது “ என்பதாகும்.


இந்த வேளையில் பல அமைப்புக்கள், இளையவர்கள் அரசியல் கட்சிகள் என்ற பலர் ஆங்காங்கே அனர்த்தமுகாமைத்துவப் பணியில் ஈடுபட்டாலும், ஒருங்கிணைந்த செயற்பாட்டு நிரல் இருக்கிறதா என்பது வினாக்குறியே.


இந்த ஒன்றுபட்ட நிகழ்ச்சி நிரலை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும் என்பதை இன்று களத்தில் உள்ளவர்கள், சுனாமி வேலைத்திட்டத்தில் பங்கு கொண்ட பலரின் அனுபவங்கள் ஊடாக உணர வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். அந்த வகையில் தான் எமது மருத்துவப்பிரிவுப் பெண் போராளி, வசந்திமாலா அவர்களின் அனுபவங்களை, கவிமகனின் சந்திப்பு கொண்டு வருகிறது.


வணக்கம் நீங்கள் ஒரு மருத்துவப் போராளி நீண்டகால மருத்துவ சேவையில் அனுபவம் மிக்கவர் அந்த வகையில், எம் மக்களுக்கான பணிகளில் நீங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தான் சுனாமிப் பேரலைகளின் தாக்குதலால் எம் தேசம் அவலத்தை சந்தித்தது. இது தொடர்பாக உங்களின் மனநிலைகளை என்னுடன் பகிருங்கள்.


வணக்கம் கவி நிச்சயமாக பகிர்கிறேன்.


சுனாமி எம் தாயகப் பிரதேசத்தை தாக்கிய போது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்?
நான் அப்போது கற்சிலைமடுப் பகுதியில் இருந்த திலீபன் மருத்துவமனையில் மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்தேன். அன்று காலை 9.30-10 மணிக்கு இடைப்பட்ட நேரமாக இருக்க வேண்டும். அவசரத் தகவல் ஒன்று எமக்குக் கிடைத்தது. அதில் கடல் நீர் பேரலையாக ஊருக்குள் புகுந்து பலத்த சேதம் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான செய்தி என்னை வந்தடைந்த போது அதன் உண்மையான தாக்கம் எனக்குப் புரியவில்லை. அப்போது சுனாமி என்ற பெயரைக் கூட அறியவில்லை. ஆனால் குறித்த சில நிமிடங்களில் நான் முல்லைத்தீவுக்குச் சென்ற போது தான் அதன் உண்மையான தாக்கம், எவ்வாறான வீரியம் கொண்டது என்பதை உணர்ந்தேன். சுனாமி என்பது என்ன என்றே தெரியாத எமக்கு பெரும் அழிவுகளைத் தரும் இயற்கையின் சீற்றத்தை அன்று உணர்த்திச் சென்றிருந்தது சுனாமி பேரலைகள்.


நீங்கள் முல்லைத்தீவுக்கு போனவுடன் எவ்வாறான காட்சிகளை கண்டீர்கள்?
நான் பல போராளிகளின் காயங்களுக்கு சிகிச்சை செய்திருக்கிறேன். வெடிப்பொருட்களின் கோரத்தாண்டவத்தால் பிய்ந்து போன மக்களின் உடல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்டு காயப்பட்டவர்களை பார்த்த போது மனம் வெறுமையாகியது. பல நூறு உயிரற்ற சிறுவர்களின் உடலங்களை ஓரே இடத்தில் பார்த்த போது கண் கலங்கியதை தடுக்க முடியவில்லை. திரும்பிய இடங்கள் எங்கும் உடலங்கள் வெறுமையாக கிடந்தன. காயப்பட்டவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் கரிய நிறத்திலான தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அவல ஓலம் மட்டுமே அங்கே கேட்டுக் கொண்டிருந்தது. போராளிகள் பலரும் உயிர் தப்பிய மக்களும் இணைந்து காயப்பட்டவர்களை மீட்டுக் கொண்டிருந்தார்கள். தம்மால் ஆன முதலுதவிகளை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நான் போனவுடன் என் மருத்துவப்பையில் இருந்த பொருட்களை வைத்து முதலுதவியை தொடங்கினேன்.


இரண்டாவது தடவை சுனாமி பேரலை வந்த பின் தான் நான் அங்கே போனேன் போன போது அங்கே ஏற்கனவே எனக்கு அறிமுகமான போராளிகள் சிலர் மீட்புப் பணிகளில் செயற்பட்டுக்கொண்டு நின்றனர். அதில் மருத்துவப் போராளி திரு. வண்ணன் மற்றும் போராளி திரு. துளசிச்செல்வன் போன்றவர்கள் சுனாமிப் பேரலைகளின் முதல் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அங்கே வந்திருந்தனர். அவர்களை உள்ளடக்கிய போராளிகள் மற்றும் மக்கள் தான் தான் முதலில் மீட்புப் பணியைத் தொடங்கியவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போதையநிலமை அவ்வாறு தான் இருந்தது.


அவர்கள் உடனே அவ்விடத்துக்குச் சென்றவர்கள் என்பதால் தமது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்தார்களா?
ஓம். பின்பு ஒருநாள் இவை பற்றி பேசினார்கள். அப்போது, அவர்கள் கடல் நீர் தேங்கி நின்ற பகுதிக்குள் நடந்து சென்ற போது, கால்களுக்குள் உயிரற்ற உடலங்கள் தட்டுப்பட்டதையும், காயப்பட்டவர்கள் அலறியதையும் கண்டிருக்கிறார்கள். உடனே உயிரற்ற உடலங்களையும், காயப்பட்டவர்களையும் படகுகளில் ஏற்றி தண்ணீரற்ற மேட்டுப் பகுதிகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். “செந்தளிர்” சிறுவர் பராமரிப்பு நிலையம் இருந்த பகுதிக்கு சென்ற மருத்துவப் போராளி திரு. வண்ணன் பனைமரம் ஒன்றை கட்டிப்பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் குழந்தையை காப்பாற்றியதாகவும் வீட்டின் கூரை ஒன்றில் தூக்கி எறியப்பட்ட நிலையில் இருந்த குழந்தையை காப்பாற்றியதாகவும் கூறினார். அது மட்டுமல்லாது இவ்வாறு பல குழந்தைகளையும், பெரியவர்களையும் மீட்டு, ஒரு கட்டிடத்தின் கூரைச்சுவரில் ஏற்றி விட்டதாகவும் பின்பு இரண்டாவது தடவை சுனாமிப் பேரலை வரலாம் என்ற நிலையில், அவர்களை இறக்கி அரச அதிபர் காரியாலயத்தில் இருந்த மொட்டை மாடியில் ஏற்றிப் பாதுகாத்ததாகவும் கூறினார்கள்.

அதன் பின்பு என்ன நடந்தது?
அவர்களைக் காப்பற்றிய விட்டு தாமும் மொட்டை மாடியில் ஏறி நின்று பார்த்த போது இரண்டாவது பேரலை தனது தாண்டவத்தை ஆடியது. அதை கண்ணால் கண்ட அவர்களால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. அவ்வாறான கண்முன்னே முல்லைத்தீவு சிதைந்து போனதைக் கண்டவர்கள் அவர்கள் தான். அது கொடுமையான நேரம் என்றே கூறினார்கள். இரண்டாவது சுனாமித் தாக்குதல் இடம்பெற்று முடிந்த போது இவர்களால் முதல் மீட்கப்பட்ட உயிரற்ற உடலங்கள் எவற்றையும் காண முடியவில்லை. அவை அனைத்தையும் அலை இழுத்துச் சென்றிருந்தது.

எவ்வாறான காயங்களை நீங்கள் கண்டீர்கள்? உடனடியாக என்ன செய்ய முனைந்தீர்கள்?
உண்மையில் அங்கே நான் கண்ட காயங்கள் யாவும் வெட்டுக்காயங்களாகவே இருந்தது. அதாவது கருக்கு மட்டையால் கையை வெட்டினால் எவ்வாறு காயம் இருக்குமோ அதைப்போன்ற காயங்கள் தான் அதிகம். அதை விட, எலும்பு முறிவு. கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிய நசிவுக்காயங்கள் அதிகமாக இருந்தது. அவற்றை கண்டு உடனடியாக முதலுதவி சிகிச்சைகளை ஆரம்பித்தேன்.


உங்களை இப்பணிக்கு யார் ஒருங்கிணைத்தார்கள்.?
யாருடைய பணிப்பும் இன்றியே நாம் முதலில் அந்த இடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே யாரும் யாருக்கு கட்டளையிடவோ, அல்லது ஒருங்கிணைக்கவோ இல்லை தமது எண்ணப்படியே தான் முதலில் மீட்புப் பணிகளில் இறங்கினார்கள். அவர்களைப் போலவே நாமும் எம்மிடம் இருந்த மருத்துவ வளங்களை பயன்படுத்தி முதலுதவிச் சிகிச்சைகளை மேற்கொண்டோம். ஆனால் சம்பவம் நடந்து முடிந்து குறித்த இடைவெளிக்குள் எமக்கு பொறுப்பாக இருந்த ( திலீபன் மருத்துவமனை பொறுப்பாளர்) திரு. அருண் எமக்கான ஒருங்கிணைப்பை செய்தார். திலீபன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு உட்பட்ட போராளிகள் அனைவரையும் தேவையான இடங்களுக்கு அனுப்பினார். எம்மிடம் இருந்த அவசர ஊர்திகள் உட்பட்ட வாகனங்கள் அனைத்தும் கடற்கரையை நோக்கி அனுப்பப்பட்டன. உடனடியாக எம் மருத்துவ வழங்கல் சீர்குலையாமல் உரிய இடங்களுக்கு ஆளணியையும், மருத்துவப் பொருட்களையும் ஒருங்கிணைத்தார்.


இதை விட மருத்துவப்பிரிவுக்குள் இருந்த போராளிகள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பிரிவுக்குள் பணியாற்றிய அனைவரையும் மருத்துவப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. ரேகா அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். அவர்களும் தேவையான இடங்களுக்குத் தேவையான வாகன மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் பணியில் இறங்கினார்கள். இங்கே குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம், விடுதலைப்புலிகளின் களமுனையில் இருந்த (First Defense Line ) போராளிகளைத் தவிர ஏனைய படைப்பிரிவுகள் அனைவரையும் அவசரமாக ஒருங்கிணைத்து உரிய இடங்களுக்கு அனுப்பி மக்களுக்கான பணியை முன்னெடுப்பதில் தீவிரமாக செயல்பட்டார்கள் உரிய பொறுப்பாளர்கள்.


மருத்துவப்பிரிவு தவிர்ந்த வேறு யார் மருத்துவ பணிகளில் ஈடுபட்டார்கள்?
அரச மருத்துவர்கள் சிலர் இருந்தார்கள். படையணி மருத்துவப் போராளிகள் பணியாற்றினார்கள். அதை விட ஓரிரண்டு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் சிகிச்சைகளை மேற்கொண்டார்கள். ஆனால் ஓரிரு மணித்தியாலத்துக்குள் அங்கே ஏராளமான மருத்துவபீட மாணவர்கள், மருத்துவர்கள் முதலுதவிப் பயிற்சிகளைப் பெற்ற இளையவர்கள் என பலர் வந்து சேர்ந்தார்கள்.


காயப்பட்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டார்கள் அல்லது கண்காணிக்கப்பட்டார்கள்?
காயப்பட்டவர்களின் காயங்களின் தன்மைகளைக் கொண்டு அந்த இடத்தில் இருந்த மருத்துவர்கள் அவர்களை எங்கே அனுப்புவது என்ற முடிவை எடுத்தார்கள். முதலில் முள்ளியவளைப் பகுதியில் இயங்கி வந்த மாவட்ட மருத்துவமனை ( அப்போது மாஞ்சோலை மருத்துவமனை கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆரம்ப காலம் முழுமையாக மாவட்ட வைத்தியசாலையாக மாறாத காலம்) முன்மாதிரி மருத்துவ நிலையமாக்கி முதலுதவி செய்யப்பட்ட காயங்களை அங்கே அனுப்பினோம். அங்கிருந்து அவசர சிகிச்சைகளுக்கும் மேலதிக சிகிச்சைகளுக்குமாக அனுப்ப வேண்டிய காயங்கள் தரம் பிரிக்கப்பட்டு சில காயப்பட்டவர்கள் நெடுங்கேணியூடாக வவுனியாவுக்கு அனுப்பப்பட்டனர். அதே நேரம் புதுக்குடியிருப்பில் இயங்கிய பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை, மற்றும் புதுக்குடியிருப்பு தள வைத்தியசாலை ( அப்போது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை) அனுப்பப்பட்டார்கள். அங்கிருந்து மேலதிக சிகிச்சை தேவைப்படின் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கும் வவுனியா அல்லது அனுராதபுரம் என அரச கட்டுப்பாட்டு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டார்கள்.


இறந்து போனவர்களை என்ன செய்தீர்கள்?
இறந்த உடலங்கள் அனைத்தும் ஒன்றிணைக்க முடியாத சூழல் எழுந்திருந்தது. அதனால் சில உடல்கள் அந்தந்த இடத்திலேயே எரியூட்டப்பட்டும், சில உடல்கள் உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டும் என பலவகையில் அடக்கம் செய்யப்பட்டது. இவற்றை போராளிகள் மக்கள் என்றில்லாது அனைவரும் ஒன்றிணைந்தே செய்தார்கள். ஆனால் போராளிகள் ,TRO, அரச அதிகாரிகள், தமிழீழ காவல்துறை என யாராவது பொறுப்புடைய உறுப்பினர்களால் உடலங்கள் யாருடையது என உறவினர்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்ட பின்பே அடக்கம் செய்யப்பட்டது.


காயப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தது?
சுனாமிப் பேரலைகளின் தாக்குதல் நடந்த உடனே பெரும்பாலும் மக்களின் உயிர்காக்கும் நடவடிக்கைகள் தான் நடந்தன. ஆனாலும், உயிர் தப்பியவர்கள் கடற்கரையில் இருந்து சற்றுத் தள்ளி இருந்த பாடசாலைகள், கோவில்கள், பொது கட்டடங்கள் மற்றும் உறவினர்களது வீடுகள் என்பவற்றில் தங்கினர். அங்கே அதி முக்கிய தேவையாக உணரப்பட்ட உணவு, தண்ணீர் போன்றவை உடனடியாகவே வழங்கப்பட்டது. அது ஒரு புறம் இருக்க, அவர்கள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து மக்களும் அல்லது நிர்வாகங்களும் தமது ஆளுகைக்குள் இருந்த இடங்கள் எல்லாவற்றையும் திறந்து விட்டு மக்களை தங்க வைத்தனர். யாரும் எவரையும் தடுக்கவில்லை.


அவர்களுக்கான உணவு தண்ணீர் போன்றவற்றை யார் ஒருங்கிணைத்தார்கள் எவ்வாறு ஒருங்கிணைத்தார்கள்?
அங்கே கடமையில் இருந்த போராளிகள் தமது சமையல் கூடங்களில் உணவை சமைத்து வழங்கினார்கள். மறுபுறம் மக்களிடம் இருந்து திரட்டப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன. அது மட்டுமல்ல அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சமைத்த உணவு வழங்கப்பட்டது. மக்களும் தாமாகவே உணவை சமைத்து வழங்கினார்கள்.
இவை மட்டுமல்லாது மக்களுக்கான ஒவ்வொரு தேவைகளையும் நிறைவேற்றும் பொறுப்பை தமிழர் புனர்வாழ்வுக்கழகமும் எடுத்துக் கொண்டது. அதன் பின் வாழ்வாதார உதவிகளை செய்ய முனைந்த அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் அங்கே வந்திருந்தார்கள்.
ஆனாலும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஊடாக அனைத்துப் பணிகளும் சரியாக ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்க வேண்டும் என்ற தேசியத்தலைவரின் சிந்தனையின் அடிப்படையில், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரின் பணிப்பில் அரசியல்துறைத் துணைப்பொறுப்பாளர், சோ. தங்கனின் பொறுப்பில் சுனாமி ஒருங்கிணைப்பு செயலகம் என்று குறிப்பிடப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அவர்களின் ஒருங்கிணைப்பிலே அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப் பட்டன. அதனால் எங்கெல்லாம் தேவைகள் உணரப்பட்டதோ அங்கெல்லாம் தேவையான உதவிகள் போய் சேர்வதில் தாமதமோ அல்லது தடங்கல்களோ ஏற்படவில்லை. அனைவரது தேவைகளையும் இனங்கண்டு பூர்த்தி செய்யப்பட்டன.

சுனாமி ஒருங்கிணைப்புச் செயலகம் எவ்வாறு இப்பணியை செய்தது என்பதை குறிப்பிட முடியுமா?
நிச்சயமாக எனக்கு முழுமையாக குறிப்பிட முடியாது. ஏனெனில் நான் மருத்துவராக மருத்துவம், மற்றும் சுகாதார பிரச்சனைகளை கையாண்டதால் இந்நிர்வாக செயற்பாடு பற்றி குறிப்பிட முடியவில்லை. ஆனாலும் தாயகம் தழுவிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பொறுப்பாளர்கள், போராளிகள், பணியாளர்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் பணியாற்ற பணித்திருந்தது. இச்செயற்பாடுகளுக்காக அவ் ஒருங்கிணைப்புச் செயலகத்துக்கு உடனடியாக தேசியத்தலைவர் 300 மில்லியன் ரூபாக்களை வழங்கினார். உருவாக்கப்பட்டு குறுகிய நேரத்திலையே பணியாற்றத் தொடங்கிய ஒருங்கிணைப்புச் செயலகம் எல்லாப் பகுதிகளிலும் இருந்து அனைத்து விதமான தகவல்களையும் திரட்டி, புள்ளி விபரங்களை ஒருங்கிணைத்து, இவ்வுதவி நிறுவனங்களை கையாண்டிருந்தது என்பது தெரிந்த விடயம்.

நீங்கள் ஒரு மருத்துவராக எவ்வகையான விடயங்களை கையாண்டீர்கள்?
சுனாமி தாக்குதல் நடந்து மக்கள் அனைவரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த போது அங்கே தினமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? உணவு சுத்தமாக சமைக்கப்படுகிறதா? கழிவகற்றும் செயற்பாடுகள் சரியாக செய்யப்படுகிறதா என்பதை தினமும் கண்காணிக்க வேண்டும். அதை விட தொற்று நோய்த் தடுப்பூசிகள் அனைவருக்கும் ஏற்றப்பட்டது. தினமும் தொற்று நோய் பரவாமல் இருக்கும் செயற்பாடுகளை நான் கவனிக்க வேண்டும். இதற்குள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்திருந்தது. மீட்கப்பட முடியாது இருந்த உயிரற்ற உடலங்களைத் தின்று அலைந்து கொண்டுருந்தன. அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது இருந்தது. அவை மக்களை மீண்டும் கடித்து துன்புறுத்தும் அபாயம் தோன்றியது. அவற்றையும் நாம் கண்காணித்து கடிக் காயங்களைக்கான மருத்துவங்களையும் கவனிக்க வேண்டி இருந்துது.


இவ்வாறான செயற்பாடுகளின் மூலமாக நீங்கள் ஆற்றிய பணி பெரும் மக்கள் செயற்பாட்டு வெற்றி என்று கருதலாமா?
உண்மையில் இதன் உடனடி பணிகள் தன்னிச்சையாக ஆரம்பித்திருந்தாலும், பின்பு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அமைப்பினூடாக பணியாற்றப்பட்டதே வெற்றிக்கு வித்திட்டது. அதை விட போராளிகள், மக்கள், அரச பணியாளர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என பாகுபாடின்றிய அனைத்து வகையினரதும் ஒன்றிணைந்த செயற்பாடே சுனாமியின் பின்பு எம்மக்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகள் தொய்வற்று சீராக நடந்ததற்கு காரணம். அதனால் தான் சர்வதேச அளவில் சுனாமி மீள் கட்டுமானப் பணிகளில் நாம் பேசப்படுமளவுக்கு நிமிர்ந்து நின்றோம்.


இப்போது மீண்டும் ஒரு பேரிடர் எம் மண்ணில் மழை வெள்ளம் என்ற வகையில் ஏற்பட்டிருக்கிறது. இதில் இருந்து மீண்டு வர அச் செயற்பாட்டாளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஒன்றுமே இல்லை, முதலில் புள்ளிவிபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு தலமை செயற்பாட்டு அணியை உருவாக்குங்கள். அங்கே அனைவரையும் ஒருங்கிணைத்து சாதி, மத, கட்சி, அரசியல் அனைத்தையும் கடந்து ஒரு குடைக்குள் ஒருங்கிணையுங்கள். அனைத்து மக்களுக்கும் அனைத்து பிரதேசங்களுக்கும் தேவையான நேரத்துக்கு இனங்காணப்பட்ட தேவைகளுக்குரிய வெற்றிடத்தை நிரப்பும் வகையில் அதற்குரிய பணிகளை செய்யுங்கள். மழை வெள்ளம் வடிந்த பின் ஊர் செழிப்புறுவதைப் போல மக்களின் வாழ்வாதாரங்களும் செழிப்படையும். தனித்துவமாக தனித்து தனித்து செயற்பட்டால் அனைத்து மக்களின் வாழ்வாதாரங்களும் சீர்பெறும் என்று நினைக்க முடியாது. சில இடங்கள் மேம்படும் சில இடங்கள் கவனிக்கப்படாமல் போகும். அதனால் அனர்த்த முகாமைத் தலமைக் குழு ஒன்றை உருவாக்கி அதனூடாக பணியாற்றுங்கள்.
என தன் அனுபவங்களை பகிர்ந்த மருத்துவப் போராளியிடம் இருந்து விடைபெறுகிறேன் நான்.
நன்றி

நேர்கண்டது இ.இ. கவிமகன்
நாள் 26.12.2018