இறுதி யுத்தம் எம் கழுத்தை நெரித்து கொண்டு இருந்தது. திரும்பிய இடமெங்கும் உயிரற்ற வெற்றுடலங்கள் வீழ்ந்து கொண்டிருந்தன. அவை வான்வெளி தாக்குதல், எறிகணை மற்றும் குண்டுத் தாக்குதல்கள் எனவும் சீறி செல்லும் ரவைகள் எனவும் பல வகைகளில் இடம்பெற்று கொண்டிருந்தன. இத்தனைக்குள்ளும் நாமும் எமது வாழ்வினையும் உயிரையும் தக்கவைத்து கொண்டிருந்தோம்.

அப்போது நாங்கள் இரட்டை வாய்க்கால் என்ற இடத்தில் அமைந்திருந்த கடற்புலிகளின் படகுக் கட்டுமானப் பகுதி இருந்த இடத்தில் இருந்தோம். அன்று ஒருநாள் நேரம் மதியத்தைத் தாண்டி இருந்தது. நானும் மைத்துனனும் காயப்பட்டிருந்த நண்பனோடு கடற்கரையில் பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது பூங்கண்ணன் என்ற போராளி வருகிறான். என்ன மாதிரி மச்சான்? அருகில் இருந்தவன் கேட்கிறான். பூங்கண்ணனுக்கு பயங்கர பசி என்று நினைக்கிறேன். எந்தப் பதிலும் கூறாது என்னைப் பார்க்கிறான். “அண்ண பசிக்குது வீட்டுக்கு போய் ஏதாவது சாப்பிடுவமா?” கேட்டவனின் முகம் வாடி போய் இருந்தது.

அவன் அப்போது தான் முன்னணி காவல் பணியில் இருந்து வேறு ஒரு வேலையாக பின்னுக்கு வந்திருந்தான். ஒழுங்கான உணவு அருந்தி பல நாட்கள் கடந்திருந்திருக்கும். வரும் கஞ்சியைக் கூட குடிக்க முடியாத சண்டைக் களங்களே அப்போது எம் தேசத்தில் விரிந்திருந்தது. அந்த நிலையில் எமது வீட்டுக்கு சென்றால் ஏதாவது சாப்பிடலாம் என்று அவன் நினைத்திருப்பான். பின்னால் வந்திருந்த தருணத்தை வீணாக்க விரும்பவில்லை. எதாவது சாப்பிட்டால் இரண்டு மூன்று நாளுக்கு பசியைத் தாங்கிக் கொள்ளலாம்.

நான் அவனை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் செல்கிறேன். “சரிடா வா பூங்கண்ணன். வீட்டில ஏதாவது இருந்தால் சாப்பிட்டு வருவம்“நாங்கள் கடற்கரையில் இருந்து வீட்டை நோக்கி நடக்கின்றோம். திடீர் என்று தாக்குதல் தொடங்குகிறது. தலை நிமிர்த்த முடியாத நிலையில் முல்லை மாத்தளன் வீதிக்கு மறுபக்கத்தில் இருந்து தொடர்ந்து பி.கே ரவைகளை எதிரி கடற்கரைப் பக்கமாக கண்டபடி சுட்டுக் கொண்டிருக்கிறான். அந்த தாக்குதல்களால் பலர் காயப்படுகிறார்கள். பல அழுகுரல்கள் கேட்கிறது. அந்தக் குரல்களின் நடுவே ஒரு குழந்தையின் வீறிட்ட குரல். தலையை நிமிர்த்திப் பார்த்தோம். ஒன்றரை வயதிருக்கும் ஒரு குழந்தை ஒரு மண் புட்டிக்கு பக்கத்தில் அழுது கொண்டிருந்தது.

யாரும் அருகில் இல்லை. அந்தக் குழந்தை அருகில் இருந்த தறப்பாள் கொட்டிலில் வசித்தவர்களின் குழந்தையாக இருக்க வேண்டும். அதனால் தான் அதில் விளையாடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். திடீர் என்று நடந்த தாக்குதலில் அந்த குழந்தை காயப்பட்டிருந்தான். எம்மாலும் உடனே அருகில் செல்ல முடியாவில்லை. ஆனாலும் நாம் செல்ல முயல்கிறோம். நிலத்தோடு ஊர்ந்து சென்று எனது பூக்கண்ணன் குழந்தையைத் தூக்கி கொண்டு அருகில் இருந்த மணல் கிடங்கொன்றுக்குள் பாய்கிறான். நாமும் நிலத்தோடு உருண்டபடி அதற்குள் பாய்ந்து பார்த்த போது வலது காலில் சிறிய கீறல் இருந்தது. இரத்தம் வந்து கொண்டிருந்தது. அதை கட்டுப்படுத்த எம்மால் முடியவில்லை அதனால் அருகில் இருந்த மருத்துவக் கொட்டிலுக்கு கொண்டு செல்கிறோம்.

கணினிப்பிரிவின் படையணி மருத்துவப் போராளி பூவண்ணன் பரிசோதித்து விட்டு காயத்தில் சிறு கீறல் மட்டுமே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதிப்படுத்துகிறான். தன்னிடம் இருந்த குருதி தடுப்புப் பஞ்சனையைக் கட்டி இரத்தத்தைக் கட்டுப்படுத்துகிறான். தாக்குதல் தடைப்பட்டுப் போனது. அதனால் குழந்தையை அவனின் பெற்றவரிடம் ஒப்படைத்து விட்டு அந்த சிறிய இடைவெளியில் வீட்டை சென்றடைகிறோம். அம்மா பூங்கண்ணனைக் கண்டதும் மனமுருகிப் போகின்றா.

கன நாளுக்குப் பிறகு அவன் அம்மாவை காண்கிறான். சாப்பிட ஏதாவது இருக்கா…? அம்மாவைக் கேட்டேன். சாப்பாடு ஒன்றும் இல்லையப்பு கொஞ்ச மா கிடக்கு இருங்கோ வாறன் என அம்மா பதிலளிக்க நான் சோற்றுப் பானையை திறந்து பார்க்கிறேன். சோற்று பானைக்குள் எதுவுமே தென்படவில்லை. சிறியளவு கோதுமை மாவும் பட்டரும் மட்டுமே வீட்டின் உணவு சொத்தாக இருந்தது. சரி அதிலை என்றாலும் ஏதாவது செய்யலாம் எனும் சிந்தனை கொண்டவளாக அம்மா விழிகளில் நீரை வழிய விட்டு கொண்டிருந்தார்.

“ரொட்டி சுடவா அண்ணா ”

என் தங்கை (சித்தப்பாவின் மகள்). கேட்கிறாள் ம்ம்ம் ஏதாவது செய் பசிக்குது. என அருகில் இருந்த மணல் புட்டியில் அமர்கிறோம். நீண்ட நாட்கள் பசிக்கு உணவே கிடைக்காத நிலையில் ஆவலாக அவன் இருந்தான். சுட சுட ரொட்டிக்கு பட்டர் பூசி நான் கொடுக்க இரண்டு ரொட்டிகளை மட்டும் உண்டான். உண்டு முடித்து எழுந்த போது வோக்கி அழைக்கிறது. “சரி அண்ண வாங்கோ போவம் ஆள் … கூப்பிடுது. சரி வா என நானும் அவனும் மைத்துனனும் கடற்கரைப் பக்கமாக செல்வதற்கு நடக்கிறோம்.

மைத்துனன் ஏற்கனவே களமுனை ஒன்றில் அடைந்திருந்த விழுப்புண் ஒற்றை கண்ணை பறித்திருந்தது. அதனால் அவன் அப்போது மருத்துவத் தேவைக்காக களமுனையை விட்டு பின்னால் நின்றான். எந்த நேரமும் என்னவும் நடக்கலாம் என்ற நிலை இருந்தும், அவனும் அக்காயத்தையும் பொருட்படுத்தாது நடந்து வந்தான்.

“தம்பி டேய் உந்த வோக்கிய ஏண்டா பாவிக்கிறியள் அதிண்ட அதிர்வலையை வெட்டித்தானே அவன் அடிக்கிறான்.”

19 வருடங்களுக்கு மேலான விடுதலைப் போராட்ட வாழ்வின் அனுபவக் குரலாக தந்தையின் குரல் எமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. அப்பா சொல்லுறதும் சரிதான் அண்ண இதை ஒவ் பண்ணுறது தான் நல்லது. என வோக்கியை அணைத்தவன் அம்மாவிடமும் அப்பாவிடமும் விடைபெற்றான்.

“சரி அம்மா கவனமா இருங்கோ நாங்கள் வாறம்”

நாம் வீட்டை விட்டு நகர்ந்து சென்று இரண்டு நிமிடங்கள் கூட கடந்திருக்காது. கணனிப்பிரிவின் மருத்துவக் கொட்டிலைத் தாண்டிச்சென்ற போது அதற்குள் இருந்த பூவண்ணன் என்னை அழைக்கிறான். “அண்ண இதுல கொஞ்ச நேரம் இருங்கோ “சும்மா இருடா நான் கடற்கரைக்கு போட்டு வாறன். என கூறியவாறு நடக்கிறேன். ஆனால் அவன் என்னை விடவில்லை தடுத்து கொட்டிலுக்குள் இருத்துகிறான். அப்போது என்னோடு எனது மைத்துனனும் அதற்குள் இருந்து விட பூங்கண்ணன் மட்டும் கடற்கரை நோக்கி நடக்கிறான்.

திடீர் என்று கனொன் ரக தாக்குதல் ஒன்றை சிங்கள படைகள் செய்கிறது. அந்த பகுதியில் பல கனொன் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன.சதக் என்று ஒரு சத்தம் திரும்பி பார்க்க இடைவெளி விட்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஊஊஊ என்று கூவல் ஒலி நிலைமை புரிந்து நிலத்தோடு நிலமாகிறோம்.நான் நிமிர்ந்து பார்த்த போது எங்களோடு கூட வந்து கொண்டிருந்த பூங்கண்ணனைக் காணவில்லை நடந்த எதுவுமே பார்க்க முடியாத புகை மண்டலம்.

அவனுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. அவன் போன திசைக்கு ஓடிச் செல்கிறோம். நாம் நின்ற இடத்தில் இருந்து 50 மீட்டர் கூட இருக்காது. அதில் இருந்த சமையல் கொட்டிலுக்கு அருகில் அவனின் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அவன் வீழ்ந்து கிடந்தான்.

மூன்று நிமிடங்களுக்கு முன் என் கரங்களால் ரொட்டி வாங்கி உண்ட என் நண்பன். ஒரு நிமிடத்தின் முன்பு எம்முடன் பேசி சிரித்து கொண்டு வந்த எம் நண்பன் கழுத்தில் பாரிய காயமடைந்து வீழ்ந்திருந்தான்.

உணவுக் குழாய் வழியே அவன் உண்ட ரொட்டி சென்றிருக்காது. அவ்வளவு குறுகிய நேரத்துக்குள் குருதி வெளியேறியவனாக உயிர் துறந்திருந்தான். சமையல் கொட்டில் முழுவதுமாக சேதமடைந்திருந்தது. பூங்கண்ணன் எந்த அசைவும் இல்லாமல் கப்டன் பூங்கண்ணனாய் உறங்கிக் கொண்டிருந்தான்.

என் கைகளைப் பார்க்கிறேன். கொஞ்ச நேரத்தின் முன் சாப்பாட்டைக் கொடுத்து அவனின் பசியாற்றிய என்னாலோ மைத்துனனாலோ அல்லது மருத்துவப் போராளி நண்பனாலோ அவனைக் காப்பாற்ற முடியவே இல்லை….

எழுதியது. இ.இ கவிமகன்.

நாள்: 21.11.2020

குறிப்பு : பூங்கண்ணனின் உறவுகள் யாரிடமாவது அவனின் படம் இருந்தால் தந்துதவுங்கள்.