27.08.1992 அன்று மாதகல் பகுதியில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப்.கேணல் ராஜன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவிற்கு பதிலடித்தாக்குதல் ஒன்றை நடத்தும்படி தலைவர் அவர்களால் தளபதி சொர்ணம் அவர்களுக்கு கூறப்பட்டது.

உண்மையிலேயே காவலரன்களையோ முகாம்களையோ தாக்குவதாயின், அதற்கான வேவுத்தகவல்களை திரட்டி தலைவர் அவர்களிடம் வழங்க வேண்டும். அவர் அதன் சாதக பாதக நிலமையை உற்று நோக்கி அதற்கான ஆலோசனையும் வழங்குவார். அதன் பின்னர் அணிகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான மாதிரி பயிற்சிகள் வழங்கப்படும். அதற்காக காவலரனையோ அல்லது முகாமையோ பயிற்சிக்காக மாதிரி செய்யப்பட்டு, அவற்றை தாக்கி அழிப்பதைப் போன்ற கடுமையான வேகமான பயிற்சிகள் கொடுக்கப்படும். அதன் பின்பு தாக்குதல் திட்டம் தெலிவாக விளங்கப்படுத்தப்பட்டு அணிகள் நகர்த்தப்படும். ஆனால் இங்கே முற்றிலும் மாறுபட்ட நிகழ்வு நடந்தது. அந்த நேரத்தில் வேவு பார்த்து தாக்குதல் நடத்துவதென்பது இலகுவானதொன்றல்ல.

மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் கூடச் செல்லலாம் ஆனால் இது உடனடியாக செய்ய வேண்டிய தாக்குதல். ஒரு தளபதியின் வீரச்சாவுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்படம் தாக்குதல் அதனால் காலம் தாழ்த்தி தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றது. அதனால் உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும்.அதுவும் குறிப்பிட்டளவு படையினரைக் கொல்லவேண்டும்.இவையிரண்டும் இல்லாவிடில் அது பதிலடித் தாக்குதல் ஆகாது. அதனால் இது உடனடியாக செய்யப்பட வேண்டும் என்பது உத்தரவு.

பல்வேறு சமர்க்களங்களில் பங்குபற்றிய சாதனை வீரன் மூத்த தளபதி கேணல் கிட்டு யாழ்மாவட்டத் தளபதியாகவிருந்த காலத்திலிருந்து பல்வேறு சமரக்களங்களில் தனது திறமையான செயற்பாட்டால், பல வெற்றிகளைப் பெற்றுத்தந்து தலைவரதும் போராளிகளினதும் மனதில் இடம் பிடித்த ஒரு வீரன். பல்வேறு இடங்களில் பல்வேறு களங்களை வழிநாடாத்திய ஒரு தளபதி. அவரது வீரச்சாவிற்க்கு பதிலடி கொடுப்பதென்றால் காலம் தாமதிக்க முடியாது.

அதனால் ஒரு நாளுக்குள் இச் சமர் இடம்பெற்றது. வேவு அணி வேவு பார்க்கத் தொடங்கிய குறிப்பிட்ட நேரத்துக்குள் கிடைத்த வேவுத்தகவல்களின் அடிப்படையில் தளபதி லெப் கேணல் ராஜனின் வீரச்சாவிற்குப் பதிலடியாக ஒரு தாக்குதல் திட்டமிடப்பட்டு வெற்றிலைக்கேணி பெரியமண்டலாய் படைமுகாம் தெரிவு செய்யப்பட்டது .

வேறு இடங்களில் வழமையான பயிற்சிகளில் ஈடுபட்ட போராளிகள் அவசர அவசரமாக இயக்கச்சியில் ஒன்றாக்கப்பட்டு தாக்குதல் பற்றியும் அதன் முக்கியம் பற்றியும் தளபதி சொர்ணம் அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது. தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தியதோடு மட்டுமல்லாது அணிகளுடன் சேர்ந்து தாக்குதல் செய்ய வேண்டிய காவலரன்களுக்கு மிக அண்மையில் வந்து காவலரன்களையும் சுட்டிக்காட்டி தாக்குதலையும் வழிநடாத்தினார்.

தளபதி ராஜன் அவர்கள் வீரச்சாவடைந்து இருபத்திநான்கு மணிநேரத்தில் அதாவது 28.08.1992ல் இடம் பெற்ற இப் பதிலடி வெற்றிகரத் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

புலர்வுக்காக எழுத்துருவாக்கம்…சு.குணா.